-எம்.ஏ.எம்.நிலாம்-
ஈரான் இஸ்லாமிய குடியரசு ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நிஜாத் தமது ஆசியப் பயணத்தின் ஆரம்ப கட்டமாக இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை மாலை இலங்கை வருகின்றார். அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில் அவரால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றே ஈரான் ஜனாதிபதி இன்று இங்கு வருகின்றார்.
இலங்கை ஜனாதிபதியின் ஈரான் விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையில் எட்டு உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன. உமாஓயா அபிவிருத்தித் திட்டம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பை அதிகரிக்கும் விதத்தில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்துதல், நிதி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தல், ஈரான் அரச வானொலி இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பை அதிகரித்தல் , இருநாடுகளுக்குமிடையிலான கடல்வழி வர்த்தக உடன்படிக்கை என்பன இவற்றில் பிரதானமானவையாகும்.
இவற்றில் உமாஓயா அபிவிருத்தித் திட்டத்தையும் சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நவீனமயப்படுத்தும் திட்டத்தையும் ஈரான் ஜனாதிபதி அஹமத் நிஜாத் , நாளை 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கவிருக்கின்றார்.
இந்த ஆரம்ப வைபவங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பிரசன்னமாவார்.
உமா ஓயா அபிவிருத்தித் திட்டத்துக்கு ஈரான் 2500 கோடி ரூபாவை உதவியாக வழங்குகிறது.
அத்துடன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நவீனமயப்படுத்தலுக்கும் ஈரான் முழு அளவில் நிதியுதவி அளிக்கின்றது.
இந்த இரண்டு பிரதான நிகழ்வுகளுடன் ஈரான் ஜனாதிபதி வேறு முக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவிருக்கின்றார். இவற்றில் நாளை 29 ஆம் திகதி காலை 7 மணிக்கு கொழும்பு கலதாரி ஹோட்டலில் இலங்கையிலுள்ள மத அமைப்புகளின் தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெறவிருக்கின்றது.
இன்று மாலை ஈரான் ஜனாதிபதி கொழும்பு வந்தடைந்ததும் இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான மரியாதை நிமித்தமான சந்திப்பு இடம்பெறும் . இரவு 8 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருதரப்புப் பேச்சுவார்த்தை இடம்பெறவிருக்கின்றது.
இரவு ஒன்பது மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இராப் போசனவிருந்து வைபவம் இடம்பெறும்.
நாளை 29 ஆம் திகதி காலை 7.30 மணிக்கு ஹோட்டல் கலதாரியில் மதத் தலைவர்களுடனான சந்திப்பு.
காலை 9 மணிக்கு சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நவீனமயப்படுத்தும் திட்டத்தை ஆரம்பிக்கும் வைபவத்தில் கலந்து கொள்வார்.
பகல் 11 மணிக்கு உமாஓயா அபிவிருத்தித் திட்ட ஆரம்ப வைபவத்தில் கலந்து கொள்வதற்காக வெள்ளவாயவுக்கு புறப்பட்டுச் செல்வார்.
நாளை பிற்பகல் 12.45 மணிக்கு ஈரான் ஜனாதிபதி தமது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு புதுடில்லிக்கு பயணமாவார்.