* இழப்புகள் இல்லை; இராணுவம் தெரிவிப்பு
மணலாறில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இராணுவ நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் வான் வழித் தாக்குதலை நடத்தியுள்ளன.
நேற்று அதிகாலை 1.40 மணியளவில் வன்னியிலிருந்து மணலாறு வான் பிரதேசத்தினுள் நுழைந்த புலிகளின் இரு விமானங்களே, மூன்று குண்டுகளை வீசித் தாக்குதலை நடத்திவிட்டுச் சென்றுள்ளன.
மணலாறில் நேற்று முன்தினம் சனிக் கிழமை காலை முதல் நீண்டநேரம் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடும் சமர் நடைபெற்ற நிலையிலும் அன்று மாலை மணலாறு பகுதியில் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது விமானப்படை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே, விடுதலைப் புலிகளின் விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன.
மணலாறில் படையினரின் முன்னரங்க பாதுகாப்பு நிலைப் பகுதியிலேயே இந்த மூன்று குண்டுகளும் வீழ்ந்ததாகவும் இதனால் படைத்தரப்புக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லையென்றும் இராணுவச் சிப்பாயொருவரே காயமடைந்ததாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில்;
"நேற்று அதிகாலை வேளையில் வன்னிப் பிரதேசத்திலிருந்து புறப்பட்ட புலிகளின் இரு இலகுரக விமானங்கள் மணலாறு நோக்கி வருவதை விமானப் படையினரின் வான் பாதுகாப்பு ராடர்கள் அவதானித்தன.
இவ்வாறானதொரு நிலையை எதிர்கொள்ளத் தயாராயிருந்த விமானப் படையின் அதிவேக தாக்குதல் விமானங்கள் உடனடியாகப் புறப்பட்டு புலிகளின் விமானங்களைத் தேடி வந்தன.
இதையடுத்து, புலிகளின் விமானங்கள் மணலாறில் இராணுவ முன்னரங்க நிலைகள் மீது மூன்று குண்டுகளை வீசிவிட்டு வந்த வழியே திரும்பிச் சென்று வன்னிக்குள் தரையிறங்கி விட்டன.
மணலாறில் இந்த விமானங்கள் தாக்குதலை நடத்தியபோது மணலாறு முகாம் பகுதியிலுள்ள விமான எதிர்ப்பு பீரங்கிகளும் தாக்குதலை நடத்தியதாக' வும் அவர் தெரிவித்தார்.
படையினரின் முன்னரங்க நிலைகள் மீதே குண்டுகள் வீசப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ள போதிலும், மணலாறிலுள்ள 23-3 ஆவது படையணித் தலைமையகம், பிராந்திய இராணுவத் தலைமையகம் மற்றும் பல்குழல் ரொக்கட் நிலை மீதே இக்குண்டுகள் வீசப்பட்டதாக இணையத் தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நேற்று மாலை வரை இந்தத் தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்தவித தகவல்களும் வெளிவரவில்லை.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் அநுராதபுரம் விமானப் படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் கமாண்டோ தாக்குதலை நடத்தியபோது புலிகளின் விமானங்களும் அங்கு வான் வழித் தாக்குதலை நடத்தியிருந்தன. இந்தத் தாக்குதல் நடைபெற்று சுமார் ஆறு மாதங்களின் பின் நேற்று இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
நேற்றைய தாக்குதலுடன் புலிகளின் விமானங்கள் இதுவரை ஆறு தடவைகள் இராணுவ மற்றும் பொருளாதார இலக்குகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.