கனடாவில் கடந்த தேர்தலில் கனடிய கொன்சர்வேட்டிவ் கட்சி பெரும் வெற்றியடைந்து ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த லிபரல் கட்சியின் தலைவரும் பிரதமருமாகிய போல் மாட்டின் அந்தக்காலகட்டங்களில் கனடாவிலுள்ள புலிகள் இயக்கத்தினர் ஆதரவாளர் தமிழர்களிடமிருந்து சேகரித்த நிதியை தனது கட்சிப் பிரசாரங்களுக்கும் தன்னைப் பிரசாரப்படுத்தவும் பயன்படுத்தி தன்னை உயர்த்திக் கொண்ட நபர் என வெளிநாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கனடாவின் முன்னாள் பிரதமர் போல் மாட்டின் போலவே லிபரல் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் ஜீன் கிரேற்றினும் கனடாவில் இயங்கும் புலிகள் இயக்கக் குழுவினருக்கும் புலிகள் இயக்கப் பிரமுகர்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்டார் என மேலும் குறித்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இவ்வாறு கனடாவில் லிபரல்கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமர்கள் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக நெடுங்காலமாகச் செயற்பட்டு வந்த நிலையில் தற்போது ஆட்சியிலுள்ள கொன்சர் வேட்டிவ் கட்சியின் தலைவரும் கனடியப் பிரதமருமாகிய ஸ்ரீவன் ஹாப்பர் தலைமையிலான அரசாங்கம் அண்மையில் கனடாவில் இயங்கும் புலிகள் இயக்கக் குழுவினர், அமைப்புகள் , பிரமுகர்கள் உட்பட அனைத்து புலிகள் இயக்க ஆதரவாளர்களுக்கும் எதிராக தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த வகையில் சர்வதேச பயங்கரவாதத்துக்கும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகப்பட்டியலிடப்பட்டு கனடாவில் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத்துக்கும் எதிரான தீவிர தீர்மானங்களை மேற்கொண்டு தற்போதைய பிரதமர் ஸ்ரீவன் ஹாப்பர் கனடாவிலுள்ள புலிகள் இயக்க குழுக்களுக்கும் அமைப்புகளுக்கும் எதிராக கடும் நடவடிக்கைகளை அண்மையில் எடுத்துள்ளார்.
கனடாவின் பிரதமரின் கட்டளைக்கேற்ப கனேடிய பாதுகாப்புத்துறையினர் அண்மையில் எடுத்துள்ள நடவடிக்கைகளைத் தொடர்ந்து கனடாவில் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான முன்னணி அமைப்பாகிய உலகத்தமிழர் அமைப்பின் அலுவலகங்கள் அனைத்தும் கனடா அரசாங்கத்தால் மூடப்பட்டு விட்டன. கடந்த வாரம் நிகழ்ந்த கனேடிய பாதுகாப்புத் துறையின் இந்த நடவடிக்கை காரணமாக புலிகள் இயக்கத்துக்கான கனடாவில் நிதிசேகரிக்கும் மேற்படி அமைப்பின் செயற்பாட்டுக்கும் மரண அடி விழுந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைப்பு உலகத்தமிழர் அமைப்பு என்ற பொது அமைப்பின் பேரில் ஒளிந்திருந்து கனடாவில் இயங்கும் பிரபாகரனின் புலிகள் இயக்கக் குழுவினருக்காக டொலர் மில்லியன்கணக்கில் பெருந்தொகையில் கனடாவில் வாழும் தமிழர்கள் மற்றும் புலிகள் இயக்க ஆதரவாளர்களிடமிருந்து சேகரித்து விட்டார்கள் எனவும் பல்வேறு இரகசிய வழிகள் மூலம் அந்தப்பணத்தை ஷ்ரீலங்காவில் கிளிநொச்சியில் இயங்கும் புலிகள் இயக்கத் தலைமைத்துவத்துக்கு அனுப்பி வந்தார்கள் எனவும் மேற்படி ஊடகங்கள் அதுபற்றி தகவல்களை வெளியிட்டுள்ளன.
இவ்வாறு கனடாவில் உலகத் தமிழர் அமைப்பு கனடா அரசால் தடை செய்யப்பட்டு அதன் அலுவலகங்களை சீல்வைத்ததைத் தொடர்ந்து கனடா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக குறித்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
லங்காதீப வெளிநாட்டுச் செய்தித்தாள் பகுதி 27.04.2008