பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான `ருவென்ரி - 20' போட்டியில் வாட்சன் அதிரடியாக விளையாட, ராஜஸ்தான் ரோயல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சார்பில் `ருவென்ரி - 20' தொடர் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது லீக் போட்டியில் டிராவிட் தலைமையிலான பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி, வோர்னை கப்டனாகக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடன் மோதியது. நாணயச் சுழற்சியில் வென்ற வோர்ன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
பெங்களூர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளித்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் டிராவிட் `டக்' அவுட்டானார்.
இவரைத் தொடர்ந்து சந்தர்போல் (2), கலிஸ் (11) வரிசையாக பெங்களூர் அணி திணறத் தொடங்கியது. 3 சிக்சர், 6 பவுண்டரி விளாசிய ரோஸ் டெய்லர் 20 பந்தில் 44 ஓட்டங்கள் எடுத்தார். விராத் கோஹ்லி (13), பவுச்சர் (4) இம்முறை சோபிக்கவில்லை.
அடுத்து வந்த பிரவீண், வோர்ன் வீசிய 16 ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்து அசத்தினார். இவர் 3 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 34 ஓட்டங்கள் எடுத்தார். பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்கள் எடுத்தது. சகிர்கான் (17), வினய் (1) ஆட்டமிழக்காமலிருந்தனர்.
இதையடுத்து, களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு ரவாத் `டக்' அவுட்டாகி ஏமாற்றினார். அடுத்து வந்த யூசுப் பதான் 12 பந்தில் 21 ஓட்டங்களை எடுத்தார். அடுத்து வந்த வாட்சன், ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார். கலக்கலாக விளையாடிய இந்த ஜோடி அணியை வெற்றிப் பாதையில் அழைத்து சென்றது.
சிறப்பாக விளையாடிய ஸ்மித் 49 ஓட்டங்களுக்கு வெளியேறி, அரைச்சதம் அடிக்கும் வாய்ப்பை ஒரு ஓட்டத்தில் நழுவவிட்டார். வாட்சன் 61 (2 சிக்சர், 8 பவுண்டரி) கைவ் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தார். ராஜஸ்தான் ரோயல்ஸ் 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்து வென்றது.