சொந்த மண்ணில் மீண்டும் ஒரு முறை சாதித்தது தோனியின் சென்னை சுப்ப கிங்ஸ் அணி. ஹைடனின் அதிரடி அரைச்சதம் கைகொடுக்க, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சார்பில் `ருவென்ரி -20' தொடர் நடக்கிறது. நேற்று முன்தினம் சென்னையில் நடந்த லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சுப்ப கிங்ஸ் அணி, கங்குலியை கப்டனாகக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது. நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் ஆடியது.
தொடக்க வீரர்களாக கங்குலி, மெக்கலம் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய மெக்கலம் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 12 பந்தில் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பொண்டிங் முதல் பந்திலே `கோல்டன் டக்' ஆனார். ஓரளவு ஓட்டங்கள் எடுத்த சகா 27, கங்குலி 12 ஓட்டங்கள் எடுத்தனர். டேவிட் ஹசி (0), ஹபீஸ் (16) விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இக்கட்டான நிலையில் களமிறங்கிய சுக்லா அபார ஆட்டத்தை வெளிப்படுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 100 ஓட்டங்களை தாண்டியது. இவர் ஒரு சிக்சர், 4 பவுண்டரி உட்பட 33 பந்தில் 42 ஓட்டங்கள் எடுத்தார். அகார்கர் 11, முரளி கார்த்திக் 3 ஓட்டங்கள் எடுத்தனர். கங்குலி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ஓட்டங்கள் எடுத்தது.
இதையடுத்துக் களமிறங்கிய சென்னை சுப்ப கிங்ஸ் அணிக்கு ஹைடன், பார்த்திவ் நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஹைடன், டேவிட் ஹசி மற்றும் ஹபீஸ் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்து மிரட்டினார். இவருக்கு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த பார்த்திவ் 21 ஓட்டங்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
மறுமுனையில் ஹைடன் அரைச்சதம் அடித்தார். அபாரமாக விளையாடிய தோனி, முரளி கார்த்திக் பந்தில் இமாலய சிக்சர் அடித்து அசத்தினார். இவரது அடுத்த ஓவரில் தோனி மீண்டும் ஒரு சிக்சர் விளாசி அணியை வெற்றி பெறச் செய்தார். சென்னை சுப்ப கிங்ஸ் அணி 17 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 152 ஓட்டங்கள் எடுத்து வென்றது. ஹைடன் 70 (3 சிக்சர், 6 பவுண்டரி), தோனி 43 (2 சிக்சர், 3 பவுண்டரி) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தனர்.
நேற்று முன்தினம் சென்னை அணிக்கு ஹைடன் - பார்த்திவ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 66 ஓட்டங்கள் எடுத்து ஐ.பி.எல். தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த தொடக்க ஜோடி என்ற சாதனை படைத்தது. முன்னதாக கொல்கத்தாவில் நடந்த பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கங்குலி, மெக்கலம் ஜோடி 61 ஓட்டங்கள் எடுத்திருந்தது.