ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி தொடர்ந்து முன்றாவது தோல்வியை சந்தித்தது. அந்த அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி முதல் வெற்றியைப் பெற்றது.
ஐ.பி.எல். போட்டிகளில் வெள்ளிக்கிழமை மொகாலியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிய ஆட்டம் நடைபெற்றது. மும்பை அணியின் கப்டன் சச்சின் டெண்டுல்கர் காயத்திலிருந்து குணமாகாததால் இந்தப் போட்டியிலும் ஆடவில்லை. ஹர்பஜன் சிங் கப்டனாக இருந்தார்.
பஞ்சாப் அணி முதலில் ஆடி 20 ஓவர்களில் 182 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியின் சார்பில் குமார் சங்ககார அபாரமாக ஆடி 94 ஓட்டங்கள் எடுத்தார். மும்பை அணி சார்பில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர்ஆடத் தொடங்கிய மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
மும்பை அணியின் ஆட்டக்காரர்கள் எவரும் சிறப்பாக ஆடவில்லை. அந்த அணியின் ஆட்டக்காரர்கள் தொடக்கம் முதலே திணறினர். பஞ்சாப் அணியின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக அமைந்தது. பதான், ஷ்ரீசாந்த் மற்றும் சாவ்லா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிரெட்லி அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களில் 9 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை சாய்த்தார். இவரது பந்து வீச்சு பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மும்பை அணியின் மோசமான ஆட்டம் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. இது மும்பை அணிக்கு ஏற்பட்டுள்ள மூன்றாவது தோல்வியாகும். அந்த அணி இதுவரை மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. பஞ்சாப் அணி முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.