Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 28, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஸ்ரீசாந்தை தாக்கிய ஹர்பஜன் சிங்
[28 - April - 2008] [Font Size - A - A - A]
* ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து இடைநிறுத்தம்

ஸ்ரீசாந்தை அடித்த பிரச்சினை தொடர்பாக ஹர்பஜன்சிங் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கிறார்.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. மும்பை அணி தொடர்ந்து சந்தித்த 3 ஆவது தோல்வி இதுவாகும்.

போட்டி முடிவில் பஞ்சாப் அணி வீரர்கள் வெற்றியை கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஆனால் மைதானத்தில் ஒரு பக்கத்தில், இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் சின்னக் குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார். இதனை பார்த்த அனைவரும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தனர். சக வீரர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினார்கள்.

மும்பை அணியின் தற்காலிக கப்டன் ஹர்பஜன்சிங், தொடர்ந்து 3 ஆவது தோல்வியை சந்தித்த டென்ஷனுடன், ஆட்டம் முடிந்ததும் முறைப்படி எதிரணி வீரர்களுடன் கைகுலுக்கி கொண்டிருந்தார். அப்போது, `ராசியும் யோகமும் இல்லாத கப்டன்' என்று வெறுப்படையச் செய்யும் தொனியில் ஸ்ரீசாந்த் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திமடைந்த ஹர்பஜன்சிங் ஷ்ரீசாந்துக்கு `பளார்' என்று கன்னத்தில் ஒரு அறைவிட்டுள்ளார்.

அடி வாங்கிய ஸ்ரீசாந்த் அழுததால் தான் இந்த விவகாரம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. ஏனெனில் அவர்களிடையே நடந்த `உச்சக்கட்ட உரசல்' எந்தக் கமெராவிலும் பதிவானதாகத் தெரியவில்லை.

பின்னர் ஹர்பஜன்சிங் பஞ்சாப் அணியின் உடைமாற்றும் அறைக்குச் சென்று ஸ்ரீசாந்திடம் மன்னிப்புக் கேட்டார். `இது மோசமான செயல்' என்று பஞ்சாப் அணியின் கப்டன் யுவராஜ்சிங் மற்றும் முன்னாள் வீரர்கள் ஹர்பஜன்சிங்குக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் அணி நிர்வாகம் சார்பில் இது பற்றி முறைப்படி இந்திய கிரிக்கெட் சபைக்கு நேற்று முன்தினம் புகார் செய்யப்பட்டது. அத்துடன், இந்த விவகாரம் குறித்து பஞ்சாப் அணி வீரர்கள் எவரும் இனிப்பேசக்கூடாது என்றும் கட்டளையிடப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரத்தை இந்திய கிரிக்கெட் சபை மிகவும் பாரதூரமாக எடுத்து விளக்கம் கேட்டு ஹர்பஜன்சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இன்று திங்கட்கிழமை மாலைக்குள் ஹர்பஜன் விளக்கமளிக்க வேண்டுமென்று கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி ரத்னாகர் ஷெட்டி தெரிவித்தார்.

ஸ்ரீசாந்த்தை, ஹர்பஜன்சிங் தாக்கிய சம்பவம் குறித்து போட்டி நடுவர் பரூக் என்ஜினீயர் தலைமையில் விசாரணை நடைபெறவுள்ளது. இது பற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், `விசாரணை இன்று திங்கட்கிழமை டில்லியில் நடைபெறும். இரண்டு தரப்பினரிடமும் விசாரிக்கப்படும். விசாரணை ஒளிவு மறைவின்றி நடக்கும். முடிவு எடுப்பதற்கு முன்பாக, புகார் குறித்து மிகவும் கவனமாக ஆராய்வோம்.

பிரச்சினையைத் தீர்க்க எல்லா நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்படும். பஞ்சாப் அணி நிர்வாகம் அளித்த புகார் மனுவை ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி எனக்கு அனுப்பியுள்ளார். ஐ.சி.சி. நடத்தை விதிகளின் படி விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணை பணியை நான் ஏற்கனவே தொடங்கிவிட்டேன். வீடியோ ஆதாரம் கவனத்தில் கொள்ளப்படும்' என்றார்.

இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியிலிருந்து ஹர்பஜன்சிங் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கிறார். இந்தத் தகவலை ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி தெரிவித்தார். சொனி தொலைக்காட்சி நிறுவனம் வழங்கிய வீடியோ ஆதாரங்களை விசாரணை நடுவர் பரூக் என்ஜீனியர் பார்வையிட்டார். இதையடுத்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் குற்றத்திற்கான ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதால், 28 ஆம் திகதி விசாரணை நடக்கும் வரை ஹர்பஜன்சிங்கை உடனடியாக இடைநிறுத்தம் செய்வதென்று முடிவு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இதன்படி மும்பை இந்தியன்ஸ் - டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளிடையே மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹர்பஜன்சிங் விளையாடவில்லை.

ஒரு வீரர் மற்றொரு வீரரையோ, நடுவரையோ, போட்டி நடுவரையோ, போட்டி அமைப்பாளர்கள் அல்லது இரசிகர்களையோ உடல் ரீதியாக தாக்குவது ஐ.சி.சி. 4.1 விதியை மீறிய செயலாகும். இந்த விதியை மீறும் வீரருக்கு 5 டெஸ்ட் அல்லது 10 ஒருநாள் போட்டி அல்லது அதிகபட்சமாக வாழ்நாள் தடை வரை விதிக்கப்பட விதிமுறையில் இடமுள்ளது.

ஹர்பஜன்சிங் ஏற்கனவே பல முறை ஒழுங்கீன நடவடிக்கையில் சிக்கி தண்டனைக்குள்ளாகியிருக்கிறார். எனவே அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆனால் இந்த விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) தலையிடாது. ஏனெனில் இது இந்திய கிரிக்கெட் சபை நடத்தும் முதல் தரப்போட்டி. எனவே நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் இந்திய கிரிக்கெட் சபைக்கு மட்டுமே உள்ளது என்று ஐ.சி.சி. தெளிவாகக் கூறியுள்ளது.

Email this page Your Opinion Print this page
ஸ்ரீசாந்தை தாக்கிய ஹர்பஜன் சிங்
தங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையை மூடிமறைக்க ஹர்பஜன், ஸ்ரீசாந்த் முயற்சி
3 ஆவது போட்டியிலும் மும்பை தோல்வி பஞ்சாப் அணி இலகுவாக வீழ்த்தியது
சொந்த மண்ணில் மீண்டும் சாதித்தது சென்னை கொல்கத்தா அணிக்கு முதல் தோல்வி
வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் வோர்னின் ராஜஸ்தான் ரோயல்ஸ் 7 விக்கெட்டால் வெற்றி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com