Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 29, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
`சுயநிர்ணய உரிமை பற்றிய சிங்களத் தலைவர்களின் வியாக்கியானம் தவறு என்றே சர்வதேச சட்டம் கருதுகின்றது'
[29 - April - 2008] [Font Size - A - A - A]
* விடிவை நோக்கி.... என்ற தலைப்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் மாநகர சபை பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் நினைவுப் பேருரை

( நேற்றையதொடர்ச்சி )

1883 ஆம் ஆண்டில் தமிழ் பேசும் பகுதிகளும் மற்றைய பகுதிகளும் நிர்வாகக் காரணங்களுக்காகப் பிணைக்கப்பட்டதைப் பிரிக்க எங்கள் 1978 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு தடை செய்கின்றது. அந்தத் தடையையே சர்வதேசச் சட்டம் கணக்கில் எடுக்கும். 175 வருடங்களுக்கு முன் நடந்தவற்றைக் கணக்கில் எடுக்காது.

ஆனால், தம் நாட்டினுள் பாதிக்கப்பட்டும் அல்லது குரூரமாக நடத்தப்படும் மக்கள் கூட்டமொன்றின் சுயநிர்ணய உரித்தைச் சர்வதேசச் சட்டம் ஏற்கின்றது.

சர்வதேச நாடுகளும்/ பிரிவினையும்

அடுத்து சர்வதேச நாடுகளைப் பார்த்தோமானால் அவை எப்பொழுதுமே நடைமுறையில் இருக்கும் ஒரு நாட்டைத் தக்க வைக்க நடவடிக்கை எடுப்பனவே தவிர எந்த ஒரு பகுதியையும் பிரிந்து செல்ல அனுமதிக்கமாட்டார்கள். அவ்வாறு அச் செய்கைக்கு உடந்தையாக இருப்பது தத்தம் நாடுகளையும் அப்பேர்ப்பட்ட துண்டிப்புகளுக்கு ஆளாக்கி விடும் என்ற பயம் அவர்களுக்கு. ஆகவே சர்வதேசச் சட்டமானது பிரிவினை என்ற கருத்து உரித்து அடிப்படையில் நடைமுறையில் இருக்கின்றதா என்று அலசி ஆராயும் அதேநேரத்தில், சர்வதேச நாடுகள் பிரிவினையானது தமது நாட்டையும் பாதிக்கக் கூடும் என்ற உள்ளெண்ணங் கொண்டே இந்த விடயத்தை அணுகுவதை நாம் காணலாம். இங்கு ஒரு முக்கிய விடயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். பிரிந்து செல்லுஞ் சட்ட உரித்து சர்வதேசச் சட்டத்தில் உள்ளதா என்று ஆராய்வது சட்ட ஆராய்ச்சிகளில் ஒரு கட்டம். காரண காரியங்கள் ஒரு நாட்டில் மாற்றமடைந்து நிலைமை மிக மோசமான அளவுக்குச் சீர்கெட்டுப் போகுமானால் வருங்காலத்தில் சர்வதேசங்கள் அல்லது சர்வதேசச் சட்டங்கள் அப்பேர்ப்பட்ட ஒரு யதார்த்த நிலைக்கு எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்று ஆராய்வது வேறொரு கட்டம். அதாவது, சட்டத்தில் இடமிருக்கின்றதா என்பது ஒரு கட்டம். சட்டம் வருங்காலத்தில் இடமளிக்குமா என்பது இன்னொரு கட்டம்.

ஒரு நாட்டின் அரசியல் நிலைமை மோசமடைந்து வரும் போது எப்பேர்ப்பட்ட நிலைமைகளைச் சர்வதேச சமூகம் பிரிவினைக்கு ஏற்றதாக ஒப்புக் கொள்வன என்பதுதான் இந்த இரண்டாவது கட்டம். ஆகவே பிரிவினைக்கு வழிசமைப்பவர்கள், பிரிவினையே குறிக்கோளாக இருப்பவர்கள் அந்த நாட்டின் சீரழிவு எந்த அளவுக்கு மோசமாகிக் கொண்டு வருகின்றது என்பதைச் சர்வதேச சமூகத்திற்குப் பறைசாற்ற எப்பொழுதுந் தயாராகிக் கொண்டிருப்பர்.

சர்வதேச நாடுகளும் இதை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருப்பன.

மக்கள் மனோநிலையும்/ பிரிவினையும்

மூன்றாவதாக, அரசியல் தீர்வுகளால் பாதிக்கப்படப்போகும் மக்களின் மனோநிலை கண்டறியப்படவேண்டும். உதாரணத்துக்கு இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் இன்றைய அரசியல் நிலையை அவதானித்தால் நான் கூறுவது உங்களுக்குப் புரியும். ஆயுதந்தாங்குங் குழுக்கள் அல்லது அரசாங்க அதிகாரம் பெற்ற குழுக்கள் மக்களின் உண்மையான உள்ளக் கிடக்கைகளை மறைத்து விடப் பலதுஞ் செய்யலாம். பலாத்காரத்தால் ஏற்படுத்தப்படும் அரசியல் நிர்ணயிப்புக்கள் மக்களின் உண்மையான உள்ளக் கிடக்கைகளைப் பிரதி பலிக்காத வரையில் பிரிவினைக்கோ அல்லது சேர்ந்து வாழ்தலுக்கோ அவர்கள் உடந்தை என்று கூறுவது யதார்த்த நிலையைப் பிரதிபலிக்காமல் இருந்து விடக்கூடும்.

ஆகவே இந்த மூன்று விடயங்களை, அதாவது சட்டம் கூறுவதை, எம்மைச் சுற்றியுள்ளோர் கூறுவதை மற்றும் மக்கள் எண்ணுவதை வைத்தே பிரிவினை பற்றி ஆராய வேண்டும். அவ்வாறு ஆராயும் போது நமக்குப் புலப்படுவது சர்வதேசச் சட்டமும் சர்வதேச நாடுகளும் பிரிவினையை வரவேற்கத் தயங்குவதேயாகும். மேலும் நாட்டு மக்களின் உள்ளார்ந்த அபிலாஷைகளைப் பலாத்கார நடவடிக்கைகள் மூலம் பிரதிபலிக்கப் பார்ப்பது யதார்த்தத்திற்கு முரணாகும் என்பதும் வெளிப்படை.

அதற்காகப் பிரிவினையைப் பெற முடியாது என்று அர்த்தமில்லை. கொசோவோ அதை எடுத்துக் காட்டியுள்ளது. பிரிவினைதான் ஒரேயொரு முடிவா என்பது தான் கேள்வி. அந்த முடிவுக்கு வர சகல சந்தர்ப்ப சூழ்நிலைகளும் உருவாகியுள்ளனவா என்பது அடுத்த கேள்வி. அத்துடன் பிரிவினை கிடைத்தவுடன் புதிய நாட்டை நிம்மதியாக இருக்க வேறு சில நாடுகள் இடம் அளிப்பனவா என்பதும் மனதில் கொள்ள வேண்டியதொன்றே. அதனைத் தவிர்க்க யாருடன் கூட்டுச் சேரவேண்டும் என்பதும் கவனிக்கப்பாலது. ஆறாவது அரசியல் யாப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் பிரிவினை பற்றி அறிவு பூர்வமாகப் பேசுவது கூடப் பிழையாக அமையலாம். இவற்றையெல்லாம் மனதில் நிறுத்தி வைத்துக் கொண்டு சுயர்நிர்ணய உரித்துப் பற்றி ஆராயத் தொடங்குவோம்.

சுயநிர்ணய உரித்து

சுயநிர்ணய உரித்து என்றால் ஒரு நாட்டின் ஒரு பகுதியினர் அந்த நாட்டில் அவர்கள் வாழும் பகுதியில் தம்மைத் தாமே ஆள்வது பற்றித் தீர்மானம் எடுத்தலாகும். இதை The right of self - determination என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். ஒரு குறிப்பிட்ட மக்கட் குழுவானது ஏதோ காரணங்களின் நிமித்தம் கூடியவரையில் தம்மைத்தாமே ஆளும் வகையில் தீர்மானம் எடுப்பதையே இது குறிப்பிடுகிறது. இதை அகச் சுயாட்சி உரித்து என்றும் கூறலாம். புறச்சுயாட்சி என்றால் பிரிந்து போவது. அகச் சுயாட்சி என்றால் நாட்டினுள் இருந்து கொண்டே தம்மைத் தாமே ஆள்வது. இந்த உரித்து, உரிமை என்ற இரு சொற்களையும் புரிந்து கொள்ளல் நன்மை பயக்கும். உரிமை என்றால் பாத்தியதை அல்லது சொந்தம். சமூகத்தால் எமக்குத் தரப்பட்டிருப்பது அது. உரித்து என்றால் எனக்கு உரியது என்று என்னால் கோரப்படக் கூடியதொன்று. ஆகவே உரிமையைச் சமூகம் ஏற்கின்றது. உரித்தை நாங்கள் சமூகத்திடம் இருந்து கோருகின்றோம். சமூகம் சிலவேளைகளில் "உனக்கு அந்த உரித்து இல்லை" என்று கூற முடியும்.

நாடுகளும் அவற்றின் அரசாங்கங்களும் நடந்து கொள்ளும் விதத்தை, முறையை, தன்மையை அலசி ஆராயும் விதத்தில் பொதுவாய் சர்வதேசச் சட்டமானது அமைந்திருந்தாலும், குறிப்பிட்ட சில சூழல்களில் நாடுகளும் அவற்றின் அரசாங்கங்களுந் தவிர்ந்த இன்னொரு மக்கட்குழாம் பற்றியும் அவற்றின் உரிமைகள், உரித்துக்கள் பற்றியும் சர்வதேசச் சட்டம் கரிசனை காட்டி வருகின்றது. அதுதான் ஒரு குறிப்பிட்ட மக்கட் கூட்டத்தினரின் அகச் சுயாட்சி உரித்தாகும். இன்று பல நாடுகளில் இப்பேர்ப்பட்ட மக்கட் கூட்டங்களின் உரித்துக்கள் பற்றி ஆராய வேண்டி வந்துள்ளதால் வெறும் சம்பிரதாய பூர்வமான ஆராய்வில் இருந்து சர்வதேசச் சட்டக் கோட்பாட்டு நிலைக்கு இந்த உரித்து உயர்ந்தெழுந்துள்ளதை நாங்கள் அவதானிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை பல தருணங்களில் அகச் சுயாட்சி உரித்துப் பற்றி விவாதித்துள்ளது. பிரேரணைகளைக் கொண்டு வந்து இருக்கின்றது. அதாவது, ஒரு நாட்டின் இறைமையைப் பேணும் அதேநேரத்தில், அதனுள் வாழும் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தினர் தம்மைத் தாமே ஆளும் ஒரு உரித்தைப் பெற்றுள்ளார்கள் என்ற கருத்தையும் பல தருணங்களில் சர்வதேச நிறுவனங்கள் வலியுறுத்தி வந்துள்ளன. அவ்வாறான உரித்துக்களுக்குச் சில நாடுகள் இடமளிக்காமல் சில விசேட சூழல்கள் எழுந்தருணத்தில் தான் பிரிவினையை வேண்டா வெறுப்பாக ஏற்கவேண்டி வந்துள்ளது சர்வதேச சமூகத்திற்கு.

இந்த உரித்து யார் சார்பாக ஏற்கப்பட்டிருக்கின்றது என்று ஆராய்ந்தோமானால் ஒரு "மக்கட்கூட்ட"த்தினரின் என்பதை அவதானிப்போம். மக்கட்கூட்டம் என்றால் என்ன? சர்வதேசச் சட்டம் மக்கட் கூட்டத்திற்குத் தான் அகச் சுயாட்சி உரித்தை வழங்கியுள்ளது. ஆனாலும் மக்கட்கூட்டம் அல்லது ஆங்கிலத்தில் "Peoples" என்று கூறப்படும் பதம் அத்தனை வரையறையாக அர்த்தம் கற்பிக்கப்படவில்லை.

சுயநிர்ணய உரித்தானது மக்களின் மனித உரிமைகளுள் ஒன்றாகவே வளர்ந்து வந்துள்ளது என்பதை நாங்கள் அவதானிக்க வேண்டும். ஆகவே, நாடுகள், நாட்டரசாங்கங்கள் அவற்றின் உரிமைகள் என்பவற்றிற்கு முரணாகவில்லாது சுய நிர்ணய உரித்தைக் கோரக் கூடியதாக இருக்கின்றது. அதாவது, ஒரு நாட்டினுள் இருக்கும் குறிப்பிடப்படக் கூடிய மக்கள் கூட்டம் அக் கூட்ட மக்களின் பொருளாதார, சமூக, கலாசார மேம்பாட்டுக்காக அந்த நாட்டினுள் இருந்து கொண்டே வழியமைக்கக் கோருவதே இந்த உரித்தின் அர்த்தமாகும். இந்த உரித்தை அகச் சுயாட்சி உரித்தென்றுங் கூறலாம். இதற்கு எதிரானது தான் நான் முன்னர் கூறியது போல் புறச்சுயாட்சி அல்லது பிரிந்து வாழ்தல்.

சர்வதேசச் சட்டமானது சுய நிர்ணய உரித்தை வலியுறுத்தும் அதேநேரம், நடைமுறையில் இருக்கும் நாட்டின் இறைமையையும் வலியுறுத்துகின்றது. அதாவது, சுயநிர்ணய உரித்தின் வெளிப்பாடு அந்த உரித்தையுடைய மக்கள் கூட்டத்தினர் பிரிவினைக்கு வித்திடும் வண்ணமாக அமையக் கூடாது என்பதிலும் சர்வதேசச் சட்டம் கவனமாக இருக்கின்றது. அது மட்டுமல்ல சுய நிர்ணய உரித்தைப் பெறுபவர்கள் நாட்டின் அரசாங்கத்திற்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் அல்லது எதிர்த்து நிற்கும் வேற்று அரசாங்கங்களுடன் உறவுகள் வைத்து அந்நாட்டின் அரசாங்கத்தைத் தாம் சங்கட நிலைக்கு ஆளாக்கும் விதத்தில் நடக்காமலும் இருக்கச் சர்வதேசச் சட்டம் கரிசனை காட்டி வருகின்றது.

இலங்கையில் சிங்கள மக்கள் தலைவர்கள் ஐம்பது ஆண்டுகளாகக் கூறிவருவது தவறு என்றே சர்வதேசச் சட்டம் கருதுகின்றது. அதாவது வடக்கு, கிழக்கு மக்களுக்குச் சுயநிர்ணய உரித்தளித்தல் அது பிரிவினைக்கு முதற்படி என்று கூடக் கூறாமல் அது பிரிவினையே என்று தான் சிங்கள மக்கள் தலைவர்கள் கூறிவந்துள்ளார்கள். ஆனால், சர்வதேசச் சட்டப்படி ஒரு நாட்டின் மக்கள் குழுவொன்றிற்கு சுய நிர்ணய உரித்தை வழங்குவது சட்டத்திற்கு முரணாகாது என்பதே அதன் கருத்தாக அமைந்துள்ளது. உண்மையில் அந்த நாட்டின் இறைமையை அச் செயற்பாடு காக்கும் என்றே சர்வதேசச் சட்டம் கருதுகின்றது. ஒரு நாட்டின் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளை வழங்கி வேறுபாடுகள் காட்டாது நியாயமான அரசாங்கத்தை வழங்கும் ஒரு நாட்டின் இறைமையை சர்வதேசச் சட்டம் பாதுகாக்கின்றது என்றே கூற வேண்டும்.

சுயநிர்ணய உரித்து படிப்படியாக வளர்ந்து வந்த விதத்தை ஆராய்வோம். பலவிதங்களில் மந்தைகள் போல கட்டுப்பட்டிருந்த உலக நாடுகளின் மக்கள் கடந்த நூற்றாண்டில் எவ்வாறு விடிவை நோக்கிப் பயணித்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

முதன்முதலில் இந்த சுய நிர்ணய உரித்தைப் பற்றிப் பேசியவர் அமெரிக்க ஜனாதிபதி வுட்ரோ வில்சன் (Woodrow Wilson) அவர்களே.

முதலாம் உலக மகா யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின் ஐரோப்பாவை எவ்வாறு நாடுகளாகப் பிரிப்பது என்ற கேள்வி எழுந்தது. அவருடைய பிரசித்தி பெற்ற பதினான்கு குறிப்புகள் (Fourteen Points) என்ற பரிந்துரைகளிலேயே இதைக் குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயக ரீதியிலான அரசாங்கங்கள் அமைய வேண்டும் என்றும் அவ்வந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு இனரீதியான மக்கட் கூட்டத்திற்குஞ் சுய நிர்ணய உரித்து வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதாவது சுதந்திரமாக வாழ அல்லது தமக்குத் தோதான அரசாங்க முறையை ஏற்படுத்த அவர்களுக்கு உரித்து இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால், சுயநிர்ணய உரித்து என்ற சொற்றொடர் அவுஸ்திரிய - ஹங்கேரியன், ஒட்டோமன் பேரரசுகளின் கீழ் இருந்த பல நாடுகளின் மக்கள் பற்றியே அப்பொழுது பாவிக்கப்பட்டிருந்தது. பேரரசுகள் பல நாடுகளைத் தம் ஆதிபத்தியத்தினுள் வைத்திருந்தன. ஏகாதிபத்தியங்கள் வீழ்ந்ததும் நாடுகள் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்பதே அப்போதைய பிரச்சினையாக இருந்தது.

அதேநேரம், அப்போது பிரித்தானியா போன்ற நாடுகள் இலங்கை போன்ற குடியேற்ற நாடுகளை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டிருந்தன. எனினும் இந்தச் சொற்றொடர் எமக்குப் பயன் அளிப்பதாக அத்தருணத்தில் பாவிக்கப்படவில்லை. ஆகவே, 1919 ஆம் ஆண்டில் இச் சொற்றொடர் பாவிக்கப்பட்டபோது குறிப்பிட்ட எல்லா மக்கட் கூட்டத்தினரதும் அபிலாஷைகளைக் குறிப்பிடாது அம்மக்கட் கூட்டத்தினரின் அபிலாஷைகள் வல்லரசுகளின் புவி, அரசியல், இராஜதந்திரத் தேவைகளுக்கு ஏற்புடையனவாக அமைந்திருந்தால் மட்டுமே நடைமுறைப்படுத்தக் கூடியனவாக அமைந்தது. எதைக் கூற வருகின்றேன் என்றால், அன்றும் இன்றும் இந்த உலகத்தின் வெவ்வேறு மக்கட்கூட்டத்தினரின் அரசியல் சுய நிர்ணய உரிமைகள் கூட வல்லரசுகளின் வசமே மாட்டிக் கொண்டிருக்கின்றன என்பதையே. அவ்வாறு இருக்கும் போது பிரிந்து செல்வது என்பது எந்தளவுக்கு உலக வல்லரசுகளின் தேவைகளுடனும் பார்வைகளுடனும் தொடர்புபட்டது என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

(தொடரும்)

Email this page Your Opinion Print this page
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
`சுயநிர்ணய உரிமை பற்றிய சிங்களத் தலைவர்களின் வியாக்கியானம் தவறு என்றே சர்வதேச சட்டம் கருதுகின்றது'
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com