Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 29, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
மாணவர்களுக்கு பாடநூல்கள் விநியோகிப்பதில் தாமதம்
[29 - April - 2008] [Font Size - A - A - A]
இலவச பாடநூல் விநியோகம் குறித்து அரசாங்கங்களும் அரசியல்வாதிகளும் வெறுமனே பெருமை பேசிக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றதே தவிர, ஒழுங்கான முறையில் கல்விகற்பதற்கு உரிய காலத்தில் மாணவர்களின் கைகளில் பாடப்புத்தகங்கள் கிடைக்கின்றனவா என்பதைப் பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் இருப்பதாகத் தெரியவில்லை. பாடநூல்களை அச்சிடுவதில் ஏற்படுகின்ற தாமதம் காரணமாக உரியகாலத்தில் அவற்றை மாணவர்களுக்கு கல்வியமைச்சினால் வழங்கமுடிவதில்லை என்ற குற்றச்சாட்டு பல வருடங்களாக பெற்றோர்களினாலும் கல்வியாளர்களினாலும் தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டுவருகிறது. ஆனால், அந்தக் குறைபாட்டை நிவர்த்திசெய்வதற்கு உறுதியான நடவடிக்கைகளை கல்வியமைச்சு எடுப்பதாகவும் தெரியவில்லை. இவ்வருடம் பாடசாலைகளில் முதலாம் தவணை முடிவடைந்து இரண்டாந்தவணையிலும் ஒருவாரம் கழிந்துவிட்ட நிலையிலும் கூட நாடுபூராவுமுள்ள ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்படவில்லை என்று முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன. பாடநூல்கள் கிடைக்காத இவர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்வரும் டிசம்பரில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதவிருக்கும் (தரம் 11) மாணவர்கள் என்று தெரியவந்திருக்கிறது.

மாணவர்களுக்கான பாடநூல்கள் மாத்திரமல்ல, ஆசிரியர்களுக்கான வழிகாட்டி மற்றும் பாடவிதானங்களும் இன்னமும் கல்வியமைச்சினால் விநியோகிக்கப்படவில்லை என்று பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் அமைப்பாளர் உதுல் பிரேமரத்ன குற்றஞ்சாட்டியிருக்கின்றார். விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் போன்ற பிரதான பாடங்களின் நூல்கள் இன்னமும் பாடசாலைகளுக்கு வந்து சேரவில்லை. தரம் 7 மாணவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆங்கில இலக்கியம், கலை (தமிழ் மூலம்), நடனம், நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான வழிகாட்டிகளும் பாடவிதானங்களும் ஆசிரியர்களுக்கு இன்னமும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கும் பிரேமரத்ன, கல்வியமைச்சின் இச்செயலைக் கண்டித்து தங்களது சம்மேளனம் இன்றுமுதல் கையெழுத்து வேட்டையொன்றை ஆரம்பிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். நாடுபூராவும் பெறப்படவிருக்கும் இந்தக் கையெழுத்துகளுடனான 25 மீற்றர் நீளமான மகஜர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் விரைவில் கையளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தனது அமைச்சினால் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பாடநூல்களை அச்சிடும் பணிகளை இரு தனியார் அச்சகங்களினால் பூர்த்திசெய்ய முடியாமல் போனதன் விளைவாகவே பாடநூல்களை மாணவர்களுக்கு விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டிகளையும் பாடவிதானங்களையும் அமைச்சு விநியோகித்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். அரச அச்சகக் கூட்டுத்தாபனம் உட்பட வேறு 13 அச்சகங்களுக்கு பாடநூல்களை அச்சிடும் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. அப்பணிகள் பூர்த்தியானதும் இருவாரங்களில் மாணவர்களுக்கு பாடநூல்களை விநியோகிக்கமுடியும். ஆசிரியர்களிடம் வழிகாட்டிகள் இருப்பதால் மாணவர்கள் கல்வியைத் தொடருவதில் எந்தச் சிக்கலும் இல்லை என்றும் கல்வியமைச்சர் தெரிவித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

உண்மையிலேயே கல்வியமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொண்டு அதற்காகவே உழைக்கும் எந்தவொரு பெற்றோருக்குமோ அல்லது கல்வித்துறையின் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டிருக்கும் கல்வியாளருக்குமோ திருப்தியைத்தரப்போவதில்லை. இவ்வாண்டின் பாடசாலைக்கலண்டரில் முதல் தவணை முடிந்து இரண்டாவது தவணையும் தொடங்கியிருக்கும் நிலையில் பாடநூல்கள் விநியோகம் பூர்த்தியாகவில்லையென்றால், அது மிகவும் பாரதூரமான விடயமாகும். இத்தடவை மாத்திரமல்ல, ஒவ்வொரு வருடமுமே பாடநூல்களை உரியகாலத்தில் பிள்ளைகளுக்கு விநியோகிக்க கல்வியமைச்சினால் முடியாமல் இருக்கிறது. பாடநூல்களை அச்சிடும் பணிகளை ஒப்படைப்பதில் இருக்கின்ற தவறான நடைமுறையே இத்தகைய குறைபாட்டுக்கு பிரதான காரணமாக இருக்கவேண்டும். இதைத் தவிர, வேறு சாக்குப் போக்குகளை கல்வியமைச்சர் பிரேமஜெயந்தவோ அல்லது அமைச்சின் உயரதிகாரிகளோ சொல்வது அவர்களின் அந்தஸ்துக்கும் பொறுப்புக்கும் ஏற்றதாக இருக்காது என்பது எமது அபிப்பிராயம்.

முன்னைய வருடங்களில் உரிய காலத்துக்கு பாடநூல்களை அச்சிடும் பணிகளைப் பூர்த்திசெய்யாத எந்தவொரு தனியார்துறை அச்சகத்துக்கும் மீண்டும் அந்தப் பணிகளை ஒப்படைக்கக்கூடாது. பாடநூல் அச்சிடும் பணிகளை தனியார்துறையினரிடம் ஒப்படைப்பதில் அரசியல் செல்வாக்கு பெருமளவுக்குப் பயன்படுத்தப்படுவதாக நீண்டகாலமாகவே குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. பாடநூல் விநியோகத்தை தாமதிப்பதென்பது மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் பொறுப்பற்ற செயலாகும். பாடநூல் விநியோகிக்கும் பணிகளை கடந்த பெப்வரி 15க்கு முன்னதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களம் பூர்த்திசெய்யதிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆசிரியர்களுக்கான வழிகாட்டிகளும் பாடவிதானங்களும் மாணவர்களுக்கான பாடநூல்களும் வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்குள் கூட விநியோகிக்கப்படவில்லையென்றால் மாணவர்கள் தங்கள் கல்வியை எவ்வாறு முறையாகத் தொடரமுடியும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இனிமேலாவது முதல் தவணையின் முதல் ஒரு சில வாரங்களுக்குள் மாணவர்களின் கைகளுக்கு பாடநூல்கள் கிடைப்பதை கல்வியமைச்சு உறுதிசெய்ய வேண்டும்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com