*நேபாள காங்கிரஸ் வலியுறுத்தல்
காத்மண்டு: புதிய அரசை அமைத்து ஆட்சிப் பீடத்தில் ஏறுவதற்கு முன்னர் மவோயிஸ்ட்டுகள் தங்கள் வசமுள்ள ஆயுதங்களை பொது இடத்தில் போட்டு தகர்க்க வேண்டும் அல்லது அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென நேபாள காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று மக்கள் விடுதலை இராணுவம் மற்றும் நேபாள இராணுவம் ஆகிய இரண்டுக்கும் ஒருவரே தளபதியாக இருத்தல் என்பது சாத்தியமில்லை. எனவே, மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா தனது மக்கள் விடுதலை இராணுவத் தளபதி பதவியில் இருந்து உடனே விலக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அமைதிப் பேச்சுக்குத் திரும்பிய மாவோயிஸ்ட்டுகள் அங்கு அமைந்த ஏழு கட்சிக் கூட்டணி அரசிலும் இடம்பெற்றனர். அவர்கள் அமைதிப் பேச்சுக்குத் திரும்பிய போது 35,500 ஆயுதங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அவற்றை ஐக்கிய நாடுகள் சபை கண்காணித்து வருகிறது. இந்த ஆயுதங்களைத் தான், ஆட்சியில் அமரும் முன் மாவோயிஸ்ட்டுகள் தகர்க்க வேண்டும். இல்லையேல் ஒப்படைக்க வேண்டும் என நேபாள காங்கிரஸின் சிரேஸ்ட தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் மாவோயிஸ்ட்டுகள் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியாக உள்ளனர். இருப்பினும் தனித்து ஆட்சி அமைக்க அவர்களால் முடியாது. எனவே, மாவோயிஸ்ட்டுகள் தலைமையில் அங்கு விரைவில் கூட்டணி ஆட்சி அமையவுள்ளது.