*கலாநிதி இக்பாலுக்கு புகழாரம்
"கலாநிதி இக்பால் கிண்ணியாவின் கல்வி எழுச்சிக்கு வித்திட்டவர்; சிறந்த கல்விமான். மூதூரிலிருந்தம் கிண்ணியாவிலிருந்தும் நூற்றுக்கணக்கான மாணவர்களை பல்கலைக்கழகம் மற்றும் தேசியக் கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்த பெருமைக்கு உரியவர். அவருக்கு கலாநிதிப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது இம்மண்ணின் பேறாகும்" என்று மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஹாதி கலாநிதி இக்பாலுக்கு அளிக்கப்பட்ட பாராட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகப் பங்குபற்றிப் பேசும் போது குறிப்பிட்டார்.
கிண்ணியா கல்விச் சமூகம் இப்பாராட்டு நிகழ்வை அண்மையில் கிண்ணியா மத்திய கல்லூரியின் அப்துல் மஜிது மண்டபத்தில் நடத்தியது. `காலாநிதி கே.எம்.எம்.இக்பால் இதுவரை 25 நூல்களை எழுதியுள்ளார். இரண்டு சிறுகதைத் தொகுதிகள், இரண்டு சிறுவர் நாவல்கள், ஒரு கவிதைத் தொகுதி, இரண்டு சிறுவர் கதைத் தொகுதி, ஒரு இலக்கிய ஆய்வு நூல், 16 கல்விசார் நூல்கள் இவற்றில் அடங்குகின்றன. பிரதேச, தேசிய ரீதியில் பரிசுகளைப் பெற்ற இவர், எழுத்துத்துறைச் சேவைக்காக கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார் என்று நிகழ்வுக்குத் தலைமை வகித்த கிண்ணியா கோட்ட உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அப்துல்லா தெரிவித்தார்.
ஒய்வு பெற்ற ஆலோசகர் எம்.ஐ.முத்தலிப் பேசும்போது, இலக்கியத்துறையில் பிரகாசிக்கும் கலாநிதி இக்பால் தொடர்ந்து படைப்புத்துறையில் ஈடுபடவேண்டும் என்றார். கிண்ணியா பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சி.எம்.முஸ்இல் பேசும்போது, பல்துறை ஆற்றல் கொண்ட சிறந்த படைப்பாளி கலாநிதி இக்பால். கிண்ணியாவில் வெளியான `நேயம்' சஞ்சிகைக்கு பாட்டி சொன்ன நீதிக் கதைகள் தொடரை எழுதினார். அக் கதைகள் மாணவர் மத்தியில் பிரபலம் பெற்றன. எழுத்துத்துறையில் கலாநிதி இக்பால் நிகழ்த்திய சாதனைக்கு ஊன்று கோலாக அமைந்தது அவர் கடைப்பிடித்து வந்த நேர முகாமைத்துவமேயாகும். அவரது படைப்புக்களான தியாகி, மரணத்தின் விளிம்பில் ஆகியன சிங்கள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது பெரும் கௌரவமாகும் என்றார்.
ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி அதிகாரி யூ.முகைதீன்பாவா, ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பார் ஏ.எம். அப்துல்லா, கல்வி அதிகாரிகள் சார்பில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஹாதி ஆகியோரும் உரையாற்றினர். கல்வி அலுவலக ஊழியர் சார்பில் கலீல், கிண்ணியாக் கல்விக் கோட்ட அதிபர்கள் சார்பில் கிண்ணியாக் கோட்டத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர்ஏ.எம்.அப்துல்லா, கல்வி அதிகாரிகள் சார்பில் வயலக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.எஸ்.அப்துல் ஹாதி ஆகியோர் கலாநிதி இக்பாலுக்கு பரிசுகளை வழங்கினர். உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.அமீர்பாத நன்றி கூறினார்.