லிந்துலை வோல்றீம் தோட்டத் தேயிலைத் தொழிற்சாலையில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 மாடிக் கட்டிட தொழிற்சாலை எரிந்து நாசமாகியதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட் சேதமும் ஏற்பட்டுள்ளது.
இத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க இத் தோட்டத் தொழிலாளர்களும் நுவரெலியா மாநகர சபை தீயணைக்கும் படையினரும் முயற்சி செய்த போதும் தீயை அணைக்க முடியாமையினால் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
நுவரெலியாவிலுள்ள தீயணைக்கும் பிரிவினர் அங்கு சென்ற போது தொழிற்சாலையில் பெரும் பகுதி தீயில் எரிந்து நாசமாகி விட்டது.
தீயணைக்கும் இயந்திரத்திற்குத் தேவையான தண்ணீரும் அங்கு இருக்கவில்லையென்றும் 2 கிலோ மீற்றருக்கு அப்பால் சென்று நீர் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்த போதும் அது பயனளிக்க வில்லை என தீயணைக்கும் பிரிவினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இத் தோட்டத்திற்கு அருகிலுள்ள 6 தோட்டப் பிரிவுத் தொழிலாளர்கள் பறிக்கும் தேயிலைக் கொழுந்து இத் தொழிற்சாலைக்கே கொண்டு வரப்படுவதும் குறிப்பிடத்தக்கது.