கொழும்பு கொட்டாஞ்சேனை அல்விஸ் பிளேஸ் உட்பட பல்வேறு பகுதிகளில் பொலிஸாருடன் இணைந்து சிவில் உடை தரித்தவர்கள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் தொடர்பாக மேலக மக்கள் முன்னணியின் உதவிப்பொதுச் செயலாளரும் வடகொழும்பு இணை அமைப்பாளருமான ஆர்.முரளிதரன் தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனையில் சிவில் உடையில் வந்தோர் சோதனை நடத்திய முறையை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.
கடந்த 24 ஆம் திகதி இரவு அல்விஸ் பிளேஸ் பகுதியில் பொலிஸாருடன் இணைந்து சிவில் உடை தரித்தவர்கள் தேடுதல் நடத்தியுள்ளனர்.
இவர்களுக்கு யார் இந்த உரிமையைக் கொடுத்தது? வீடுகளுக்குள் நுழைந்து இரவு நேரத்தில் சமையல் அறைவரை சென்று தேடுதல் என்ற போர்வையில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸார் இவர்களுக்குக் காவலாளியாக வீட்டின் முன்புறத்தில் நின்றுள்ளனர். சம்பந்தப்பட்ட இவ்வாறான நிலைமை மேலும் தமிழ் மக்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணும் என்பதை உணர்ந்து எதிர்காலத்திலாவது இவ்வாறு நடக்காது பாதுகாப்பது பொலிஸாரின் கடமையாகும்.
இது தொடர்பாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசனின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளதையடுத்து மக்கள் கண்காணிப்பு குழு பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.