*கொழும்பு பேராயர் டுலிப் டிசிக்கேரா
24 பொதுமக்களை பலி கொண்டும் ஏராளமானோரை காயப்படுத்தியும் கடந்த வெள்ளிக்கிழமை பிலியந்தலையில் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பானது மிகவும் கொடூரமான வன்முறையாகும். விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
இவ்வாறு கொழும்பு பேராயர் டுலிப் டி சிக்கேரா பிலியந்தலையில் இடம் பெற்ற பஸ் குண்டு வெடிப்பு தொடர்பாக விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
முடிவிற்கு கொண்டு வரமுடியாத நெருக்கடியின் பிறிதொரு செயலான வன்னி பிரதேசத்தில் உள்ள அம்பைக்குளத்தில் சமீபத்தில் ரோமன் கத்தோலிக்க திருப்பணியாளர் அருள் பிதா கருணாரத்தினத்தின் கொலையும் கண்டிக்கப்பட வேண்டும். இப்பிரதேசங்களில் இராணுவ ஆழ ஊடுருவிச் செயல்படும் அணியின் செயலே இது எனக் கூறப்படுகின்றது.
பயங்கரமான இராணுவத் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்கள் வன்னியில் போர் வீரர்கள், போராளிகள் ஆகியோரை இருபுறத்திலும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி காயப்படுத்தியுள்ளது. இழந்து போன ஒவ்வொரு உயிரும் எமது மண்ணின் மகனின் உயிர், தேவையற்ற முறையில் நிகழ்ந்த மரணம். நெருக்கடியை பேச்சுவார்த்தையூடாக தீர்வு காண முடியுமெனும் சிறிய விருப்பமற்ற மக்களால் நடத்தப்படும் அர்த்தமற்ற யுத்தத்தின் விளைவுகளால் மரணத்தைச் சந்திக்கின்றனர் அப்பாவி மக்கள்.
வடக்கிலும் தெற்கிலும் வாழும் தமது அன்பானவர்களின் இழப்பினால் துயருடன் வாழும் சகல இலங்கையருக்கும் எமது திரு அவையின் அனுதாபங்களையும் மன்றாடல்களையும் தெரிவிக்கின்றேன். மனுக்குல துயரங்களைப் பகிர்ந்து கொள்ளும் உயிர்ப்பின் ஆண்டவர் எமது வாழ்க்கையில் எம்மை நிலைகுலையச் செய்யாது தாங்குவாராக.
இந்நெருக்கடியின் தாக்கம் அதிக உயரத்தை எட்டியுள்ள வாழ்க்கைச் செலவிலும் எதிரொலிக்கிறது. தமது அன்றாட செலவுகளை சந்திக்க முடியாதுள்ள ஏழைகள், குறையை தீர்க்க உடனடி நிவாரணம் அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நெருக்கடி நிலை, தினமும் சீரழிவதையும் விரிவடைவதையும் நாம் உணர்ந்தாலும் தலையிடுவதற்கு உதவியற்றவராக அல்லது சூழ்நிலைக்குட்பட்டு எதுவும் செய்ய முடியாதிருக்கிறோம்.
எமது வேறுபாடுகளுக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்து, எல்லா மக்களின் துயரங்களையும் கவனத்திற்கெடுக்குமாறு ஜனாதிபதியிடமும் சகல அரசியல் கட்சிகளின் தலைமைகளிடமும் மீண்டும் மிகுந்த பணிவுடன் வேண்டுகின்றேன். எம்மிடம் ஆற்றலுடைய தலைவர்கள், அமைதிக்காக பணியாற்ற தேவையான பயில்திறனுடையவர்கள் இன்னுமுள்ளனர். நிலையான ஒரு தீர்வை நோக்கி செயல்பயனுள்ள அகிம்சை படிமுறைகளை உருவாக்க தயவு கூர்ந்து தனித்தன்மை வாய்ந்த சிந்தனை உரையாடலை ஆரம்பித்து வளருங்கள். சகல சமூகத்தினரும் உங்களுடன் இணைந்து நடப்பார்கள்.