வெளிநாடுகளுக்கு பொதிகளை அனுப்பும் சில தனியார் நிறுவனங்கள் அண்மைக்காலமாக பொதிகளை அனுப்ப மக்களிடம் அதிக கட்டணங்களை அறவிட்டு வருவதினால், மக்கள் அஞ்சல் அலுவலகத்தை நாடி செல்வது அதிகரித்து வருவதாக தபால் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில தனியார் நிறுவனங்கள் தொடர்பாக மக்கள் விசனம் தெரிவிக்கையில், பொதிகளை அனுப்ப ஏற்றுக்கொள்ளும் போது ஒரு கட்டணமும், வெளிநாட்டில் அப்பொதியை ஒப்படைக்கும் போது சுங்கவரி, மேலதிக கட்டணம் என பண மோசடி செய்கின்றன. இதனையடுத்து அஞ்சல் அலுவலகங்கள் மூலம் அதிகளவு பொதிகள் அனுப்பப்படுவதுடன் தந்தி காசுக்கட்டளை, தொலைநகல் காசுக்கட்டளை மூலம் பணம் அனுப்புவதும் அதிகரித்துள்ளது.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகளால் சிரமங்களுக்குள்ளாகும் மக்கள் தமது வங்கி தேவைகளை கூட அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திலேயே மேற்கொண்டு வருகின்றனர். வாகன காப்புறுதி, பண சேமிப்பு, மின்சார பட்டியல் செலுத்துதல், சேமிப்பு பணம் மீளப்பெறல், வாகன தண்ட பணம் செலுத்தல், அஞ்சல் அடையாள அட்டை பெறல் போன்ற அலுவல்கள் அஞ்சல் அலுவலகத்தில் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.