மதவாச்சி வரை நடைபெறும் ரயில்சேவை வவுனியா வரை நடைபெற வேண்டும். அப்போது தான் தாம் சிரமமின்றி பயணத்தை மேற்கொள்ள முடியுமென வவுனியா வாசிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து மதவாச்சி வரை செல்ல பஸ் கட்டணம் 30 ரூபாவும், மதவாச்சியிலிருந்து ரயில் நிலையத்திற்குச் செல்ல ஆட்டோவுக்கு 150 ரூபாவும் செலவாகின்றது. கொழும்பிற்கு செல்ல சுமார் 300 ரூபாவுக்கு மேல் செலவாகின்றது. வவுனியாவிலிருந்து 175 ரூபாவுடன் 3 ஆம் வகுப்பு உறங்கல் இருக்கை பெட்டியில் பயணம் செய்யமுடிந்தது. எனவே தான், முன்னரை போல் வவுனியாவிற்கான சேவை நடைபெற வேண்டுமென மக்கள் கேட்கின்றனர். சாதாரண மக்கள்படும் கஷ்டங்களை உணர்ந்து வவுனியாவரை ரயில் சேவையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கடும் யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட வவுனியா - கொழும்பிற்கான ரயில் சேவைகள் நடைபெற்ற நிலையில், ரயில் சேவைகள் திணைக்களத்திற்கு பெரும் வருமானத்தை பெற்றுக்கொடுத்த வவுனியா - கொழும்பு ரயில் சேவையை விரைவில் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை பல தரப்பிலிருந்தும் விடப்பட்டுள்ளது.