பொல்கஹவெல புகையிரத நிலைய சிற்றுண்டிச்சாலையில் பாவிக்கப்படுகின்ற குடி நீரில் மனித மலக்கழிவு நீர் சேர்ந்திருப்பதாக அரசாங்க வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார நல சேவை அதிகாரி மஞ்சுள அபேவிக்கிரம தெரிவித்துள்ளார்.
இந்த புகையிரத நிலையத்தில் குடிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள 100 மில்லிலீற்றர் குடிநீரில் ஈக்கொலப் பற்றீரியா கிருமிகள் 1600க்கும் மேல் இருப்பதாக வைத்திய பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது சிற்றுண்டிச்சாலையில் உள்ள உணவுப் பண்டங்கள் தடைசெய்யப்பட்டிருப்பதுடன் வெளியிலிருந்து உணவுப் பண்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளருக்கு எதிராக பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றத்தில் விரைவில் வழக்குத் தொடரவிருப்பதாக சுகாதார சேவை அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள மிக முக்கியமான புகையிரத நிலையங்களில் ஒன்றான இந்தப் புகையிரத நிலையத்திற்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்தச் சிற்றுண்டிச்சாலையையே பயன்படுத்துகின்றனர். இதில் உணவைப் பெற்றுக்கொண்ட பயணிகள் நோய்களுக்குள்ளாகியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புகையிர நிலையத்தின் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொதுச் சுகாதார நலச்சேவை வைத்திய அதிகாரியின் ஆலோசனையின்படி மேற்படி பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.