* மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ஜோன் செனவிரட்ன
வடபகுதியை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க பெரும் யுத்தத்திற்கு முகம் கொடுக்கும் அதேவேளை, நாட்டில் அபிவிருத்திப் பணிகளையும் எவ்வித தடையுமின்றி முன்னெடுத்து வருகிறோம். எதிர்க் கட்சியினர் என்னதான் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம், ஊர்வலங்களை நடத்தினாலும் இந்நாட்டு மக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
தெரணிகலை பொல்கஸ்வத்த என்ற இடத்தில் சீன அரசின் நிதியுதவியுடன் 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
`நாட்டில் யுத்தம் நடைபெறுவதால் பாதுகாப்புச் செலவினம் அதிகரித்துள்ளது. இதனால் நாம் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது. தற்போது நாட்டில் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணத்தை நாம் குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை பெற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக எமது அமைச்சின் தூதுக்குழுவொன்று இந்தியா சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. இப்பேச்சுவார்த்தை வெற்றியளித்தால் இந்தியாவிலிருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை பெற்றுக்கொடுப்போம்.
உலக சந்தையில் எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன. இவ்விலை அதிகரிப்பை எதிர்க் கட்சியினர் பதவிக்கு வந்தாலும் அவர்களால் தடுக்க முடியாது.
நாட்டில் உணவுற்பத்தியை அதிகரிப்பதன் மூலமே உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியும். 2012 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் மின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்கி முடிக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்' என்றார்.