* யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீடாதிபதி தேவராஜா
ஆலயங்கள் மட்டும்தான் புனிதமான இடமல்ல; நாம் பணிபுரியும் இடங்களும் மக்களுக்குத் தொண்டு செய்யும் புனிதமான இடங்களே. அலுவலகங்கள் சிறந்த முகாமைத்துவத்தைக் கொண்டிருந்தால்தான் மக்களுக்கு சிறப்பாகச் சேவைபுரிய முடியும். முகாமைத்துவத்தை மேற்கொள்பவர்களுக்கு சிறந்த தலைமைத்துவப்பண்புகள் இருக்குமானால் அதனால் பயன்பெறுபவர்கள் மக்கள்தான். இன்று வெளியிடப்பட்ட அலுவலக முகாமைத்துவ நூல், புதிய சிந்தனைகளை எடுத்துச்சொல்கின்றது. இவ்வாறு பேராசிரியர் தேவராஜா தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில், தீவக லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக் கணக்காளர், லயன் நா.இராசநாயகமும் அவரது துணைவியாரான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி. ஜெ.இராசநாயகமும் இணைந்து வெளியிட்ட `அலுவலக முகாமைத்துவம்' என்னும் நூலை வெளியிட்டுவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு தீவக லயன்ஸ் கழகத்தலைவர் லயன் ஐ.ஜீ.சந்திரசேகரன் தலைமைதாங்கினார்.
யாழ்ப்பாணப் பலகலைக்கழக முகாமைத்துவ பீடாதிபதி தேவராஜா தொடர்ந்தும் உரையாற்றுகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள `அலுவலக முகாமைத்துவம்' நூல் பலசிறப்பம்சங்களை கொண்டிருப்பது புலனாகின்றது. அலுவலக முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிறப்பம்சங்களை பலகூறுகளாக வகுத்து விளக்கியுள்ளது. சிறந்த தலைமைத்துவப் பண்புகளால் சிறப்பான முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்த முடியுமென இந் நூல் கூறுகிறது.முகாமைத்துவத்துவம் சிறப்படைய வேண்டுமானால் மேலாண்மை அவசியமானது. அலுவலக முகாமைத்துவம் பற்றி பலநூல்கள் வெளிவந்த போதிலும் இந்நூல், புதிய பல கருத்துக்களை உள்வாங்கியிருப்பது பாராட்டுக்குரியது. இந்நூல் முகாமைத்துவத்தில் உள்ளவர்களுக்கு தமது தொழில்சார் விருத்தியை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்றார்.
தீவக லயன்ஸ்கழகத் தலைவர், ஐ.ஜி.சந்திரசேகரன் தலைமையுரையாற்றுகையில், சர்வதேச லயன்ஸ்கழகங்களின் ஐந்து செயல்பாடுகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது மக்கள் மத்தியில் தலைமைத்துவப் பண்புகளை உருவாக்குவதாகும். இன்று நாம் அலுவலக முகாமைத்துவம் என்னும் நூலை வெளியிட்டு வைப்பதில் பெரும் உவகையடைகின்றோம். அலுவலக முகாமைத்துவம் இன்று எமக்கு தொழில்சார் திறன்விருத்திக்கு முக்கியமாக தேவையாகவுள்ளது. இதற்கான நல்ல தேடலை நூலாசிரியர் எமக்கு விரிவாக தனது நூலின் மூலம் தந்துள்ளார். அலுவலகங்கள் மக்களுக்கு பணியாற்றும் ஆலயங்களாக இருப்பது அவசியமானது. நிர்வாகம் சிறப்பாக இருக்கவேண்டுமானால் முகாமைத்துவக் கோட்பாடுகளை கற்றிருந்தாலும் நடைமுறையில் ஏற்கக்கூடிய சிறந்த தலைமைத்துவப்பண்பு முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்துபவர்களிடம் இருக்குமானால் அவர்கள் நல்ல பணியாற்றமுடியுமென்றார்.
நூலினை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் இ. விஜயகுமாரன் வழங்கினார். நிகழ்வில் தலைமைத்துவக் கருத்தரங்கை முன்னாள் கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் எம்.கமலநாதன் நெறிப்படுத்தினார்.