தெற்கில் இடம்பெறும் பஸ் குண்டு வெடிப்புகளையடுத்து பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் பஸ் நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் போன்ற பகுதிகளில் விஷேட பாதுகாப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதற்கு பொது மக்களின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான என்.கே. இலங்கக்கோன் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை பிலியந்தலையில் இடம்பெற்றது போன்று விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இப்புதிய பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக நகர்ப்பகுதியிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் பஸ் நிலையங்களின் பாதுகாப்பு அதிகரிப்பதற்காக ஊர் காவற்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதேநேரம், பிலியந்தலை, தெகிவளை, கல்கிசை போன்ற பகுதிகளில் பஸ் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில் தேடுதல்களும் அதிகரிக்கப்படவுள்ளன.
பொலிஸார் மேற்கொள்ளும் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.