* தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு
எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது அரசு தரப்பால் ஐக்கிய தேசியக் கட்சி மீது மேற்கொள்ளப்பட்டுவரும் அடாவடித் தனங்கள், தடைகள் தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சி பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா நேற்று திங்கட்கிழமை தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்காவை சந்தித்து முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்று மாலை தேர்தல்கள் செயலகத்தில் ஆணையாளரைச் சந்தித்த திஸ்ஸஅத்தநாயக்கா மற்றும் கட்சி உறுப்பினர்கள், கிழக்குமாகாணத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கச் செல்லும் பொருட்டு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஹெலிகொப்டரை வாடகைக்குத் தர அரசு மறுத்து வருவதாகத் தெரிவித்தார்.
கட்சித்தலைவர்கள் சந்திப்பின் போது எதிர்க்கட்சித்தலைவரின் பாதுகாப்பு கருதி கிழக்கே செல்வதற்கு ஹெலிகொப்டரை வழங்க ஜனாதிபதியும், பாதுகாப்புத்தரப்பும் உறுதியளித்திருந்தனர். இன்று 29 ஆம் திகதி திருகோணமலை பிரசாரக் கூட்டத்துக்குச் செல்வதற்கு ரணில் விக்கிரமசிங்க தயாராகியுள்ள நிலையில், நேற்று மாலை தவிர்க்கமுடியாத காரணங்களால் ஹெலிகொப்டரை வழங்க முடியாதிருப்பதாக அரசு கையை விரித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது ரணில் விக்கிரமசிங்க கிழக்குக்கு சென்று தேர்தல் கூட்டங்களில் பங்கேற்பதைத்தடுக்கும் முயற்சியாகவே நாம் காண்கிறோம். அத்துடன் எமது பிரசாரக்கூட்டங்களுக்கு மட்டும் பொலிஸார் சட்டத்தைக்காட்டி பலதடைகளைப் போட்டு வருகின்றனர். ஆளும் தரப்புக்கு எந்த தடையுமின்றி தாராளமாக எப்படி வேண்டுமானாலும் செயற்பட இடமளித்து பொலிஸார் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தேர்தல் நாள் நெருங்கி வரும் போது எதிர்க்கட்சியின் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடாவடித்தனங்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றைத்தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் வாக்களிப்பில் நம்பிக்கை வைக்க முடியாது என்றும் திஸ்ஸ அத்தநாயக்கா தமது முறைப்பாட்டில் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை, அரசு எத்தகைய தடைகளைப் போட்டாலும் திட்டமிட்டபடி கிழக்கில் நடைபெறும் சகல பிரசாரக் கூட்டங்களிலும் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டு உரையாற்றவிருப்பதாகவும், கட்சியின் ஏனைய எம்.பி. க்கள், மாவட்டங்களின் அமைப்பாளர்கள், கட்சி உயர் மட்டத்தினர் அனைவரும் இன்று முதல் தேர்தல் முடியும் வரை கிழக்கில் முகாமிட்டுச் செயற்பட விருப்பதாகவும் தெரிவித்தார்.