கொக்குவில் கிழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போன இளம் தாயொருவரது சடலம், யாழ். நகரில் பாழடைந்த வீடொன்றினுள் எரிந்தும் பழுதடைந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டது.
யாழ். நகரில் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகே பாழடைந்த வீடொன்றினுள்ளிருந்து துர்நாற்றம் வீசவே அயலவர்கள் அங்கு சென்று பார்த்த போது பெண்ணொருவரது சடலம் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
இதையடுத்து யாழ்ப்பாண பொலிஸாருக்கு இதுபற்றி அறிவிக்கப்படவே நேற்று முன்தினம் ஞாயிறு மாலை அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை பொலித்தீன் பையொன்றினுள் போட்டு எடுத்துச் சென்று யாழ். ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.
சடலம் மிக மோசமாகப் பழுதடைந்து துர்நாற்றம் வீசியதுடன் சடலத்தில் பலத்த எரிகாயங்களும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சடலத்திற்கு அருகில் அவருடையதென நம்பப்படும் கையடக்கத் தொலைபேசி ஒன்றும் அடையாள அட்டையும் வேறு சில பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கொக்குவில் கிழக்கு, பொற்பதி வீதியைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தாயான அன்னலிங்கம் அனித்தா (24 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
கடந்த சில தினங்களுக்கு முன் இவர் காணாமல்போயிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.