சிறுவர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவரை இலங்கை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
போலி ஆவணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிங்கப்பூரிலிருந்து 3 சிறுவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதை தொடர்ந்தே இதன் பின்னணியில் செயற்பட்ட சந்தேகத்தில் மூவர் கைதாகியுள்ளனர்.
சிறுவர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது பல மாதங்களாக இடம்பெற்றுவருவதாகவும் இதன் பின்னணியிலிருப்போர் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நேற்று திங்கட்கிழமை தெரிவித்தது.
நாம் மூவரைக் கைது செய்துள்ளோம். விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன என்று சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைத் தலைவர் ஜகத் வெள்ளவத்த தெரிவித்திருக்கிறார்.
11 வயது சிறுமி மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்களை சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு திருப்பி அனுப்பியதையடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்த கூறியுள்ளார். போலி மலேசியக் கடவுச்சீட்டுகளுடன் இவர்கள் மூவரும் பிரிட்டனுக்கு செல்வதற்கு முயன்றுள்ளனர்.
இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு போலிக் கடவுச்சீட்டுகளுடன் அழைத்துச் செல்லப்பட்ட இந்த மூவரும் அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக பிரிட்டனுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் வெள்ளவத்த கூறியுள்ளார்.