தென்பகுதி கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள கடும் கடற்கொந்தளிப்பால் வெலிகம மிரிஸ மீன்பிடித் துறைமுகப்பகுதியில் பெரும் சேதங்களேற்பட்டுள்ளன.
வங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளிலும் நேற்றுமுன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
தென்பகுதி கடலிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால் நேற்று திங்கட்கிழமை பெரும்பாலான பகுதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
இதனால் வெலிகம மிரிஸ மீன்பிடித்துறைமுகப் பகுதியில் மீனவர்களின் பெருமளவு இழுவைப் படகுகளும், படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
நேற்றைய கடற்கொந்தளிப்பால் இங்கு நிறுத்தப்பட்டிருந்த பல இழுவைப் படகுகள் பாரிய அலைகளால் கரைக்கு இழுத்து வரப்பட்டு ஒன்றுடன் ஒன்று வேகமாக மோதுண்டதுடன், கரையில் கடலரிப்பைத் தடுப்பதற்காக போடப்பட்டிருந்த முருகைக்கல் குவியல்களுடனும் மோதுண்டு பலத்த சேதமடைந்தன.
இவற்றால் சேதமடைந்த பல இழுவைப் படகுகளினுள் நீர்புகுந்ததால் அவை கரையில் நீரில் மூழ்கிய அதேநேரம், வேறு இழுவைப் படகுகள் பாரிய அலைகளால் இழுத்து வரப்பட்டு மூழ்கிக்கிடந்த இழுவைப் படகுகளுடன் மோதுண்டு பலத்த சேதமடைந்தன.
ஆரம்ப மதிப்பீட்டின்படி எழுபது மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடல் கொந்தளிப்பு தொடர்ந்தால் மீன்பிடித் துறைமுகத்திற்கும் இழுவைப் படகுகளுக்கும் மேலும் சேதங்களேற்படலாமென அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரிஸ மீன்பிடித்துறைமுகப் பகுதியில் நேற்று முழுவதும் பெருமளவு மீனவர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் கூடியிருந்ததையும் காணமுடிந்தது.