* பிரதம செயலாளர் அலுவலகத்தை ஊழியர் முற்றுகை
வட மாகாண சபையை வவுனியாவுக்கு இடமாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாகாண நிர்வாக ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை திருகோணமலையில் எதிர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பும் ஆர்வமற்ற முறையிலேயே இடம்பெற்றது.
ஊழியர்கள் மாகாண பிரதம செயலாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு சபையை வவுனியாவுக்கு மாற்றும் முயற்சியை கைவிடக்கோரி மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
நேற்றுக் காலை 8.30 மணி தொடக்கம் தமது பணிகளை புறக்கணித்த 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வடமாகாண சபையை வவுனியாவுக்கு இடமாற்றுவது குறித்து வெளியாகியுள்ள செய்திகளின் உண்மைத் தன்மை குறித்து உயர்அதிகாரிகள் விளக்கம் தரவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன், அவர்கள் பிரதம செயலாளர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டு வடமாகாண சபைக்குரிய அமைச்சுக்கள், திணைக்களங்களை வவுனியாவுக்கு மாற்றுவதால் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் விளக்கி அவரிடம் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.
மகஜரைப் பெற்றுக் கொண்ட பிரதம செயலாளர் தான் இது குறித்து உரிய தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளார்.
சுமார் 2 மணித்தியாலம் நீடித்த இப்போராட்டம் பிரதம செயலாளரின் உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. எனினும், வடமாகாண சபை ஊழியர்கள் மேற்கொண்ட எதிர்ப்புப் போராட்டம் காரணமாக தபால் மூல வாக்களிப்பில் ஊழியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமயம் அப்பிரதேசத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.