* பயணிகளின் தகவலால் செயலிழக்க வைப்பு
கல்கமுவ பஸ் நிலையத்திலிருந்து நேற்று திங்கட்கிழமை காலை சக்திமிக்க நேரக்கணிப்புக் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்றுக்காலை 6 மணியளவில் பஸ் நிலையத்தின் உட்புறப் பகுதியில் கிடந்த சிறிய பொதியொன்றில் ஏற்பட்ட சந்தேகத்தயைடுத்து அதுகுறித்து பயணிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இந்த சக்திமிக்க மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பரிசுப் பொதிபோல் பொதிசெய்யப்பட்டிருந்த பெட்டியினுள் மண்ணிறக் கடதாசியால் சுற்றப்பட்டு இந்த மோட்டார்க் குண்டு வைக்கப்பட்டிருந்தது.
சுமார் 7.30 மணியளவில் வெடிக்கும் விதத்தில், ரி.81 மில்லிமீற்றர் ரக மோட்டார் குண்டு நேரக்கணிப்புக் கருவி மற்றும் வெடிக்கவைக்கும் கருவியுடன் வயர்கள் மூலம் இணைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெட்டியினுள் குண்டிருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் அங்கு குண்டுசெயலிழக்க வைக்கும் படையினர் வரவழைக்கப்பட்டு அப்பகுதியிலிருந்து பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட பின்னர் பார்சல் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு செயலிழக்கச் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் பின்னரே அப்பகுதி வழமைக்குத் திரும்பியது.
இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.