அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் (சி.ஐ.டி.)விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த பெண்ணொருவர் நேற்று திங்கட்கிழமை காலை மரணமடைந்துள்ளார்.
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவருக்கு உதவியதாகக் கூறி ராணி என்ற பெண் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.
இந்தப் பெண் சி.ஐ.டி.யினரின் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த நிலையிலேயே நேற்றுக்காலை திடீரென மரணமானார்.
இவரது மரணம் குறித்து பல்வேறு ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றபோதும் இவரது வீசிங் (அஸ்மா) காரணமாகவே மரணமானதாக பொலிஸ் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான என்.கே.இலங்கக்கோன் தெரிவித்தார்.
இவரது உடல் பிரதேச பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.