எம்.ஏ.எம்.நிலாம்
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நிஜாத் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று திங்கட்கிழமை மாலை 6.45 மணிக்கு கொழும்பு வந்தடைந்தார்.
நேற்று மாலை 5.30 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானம், ஒன்றரை மணிநேரம் தாமதித்தே விமான நிலையத்தை வந்தடைந்தது.
விமான நிலையத்திலும் அதனைச் சுற்றிய பகுதிகளிலும் கொழும்பு, நீர்கொழும்பு வீதி முழுமையாகவும் நேற்று மாலை அதிஉச்சப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
விமானத்திலிருந்து இறங்கிய ஈரானிய ஜனாதிபதி விசேட வாகனமொன்றில் அரச வரவேற்பளிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்குச் சென்று ஈரானிய ஜனாதிபதியை ஆரத்தழுவி கைலாகு கொடுத்து வரவேற்றார்.
அதன்பின்னர் ஈரான் ஜனாதிபதிக்கு இலங்கை அமைச்சர்கள், முக்கிய அதிதிகளை ஜனாதிபதி அறிமுகம் செய்துவைத்தார்.
அடுத்து கடற்படையினரின் மரியாதை அணிவகுப்பை ஈரானிய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து கடற்படையினர் 6 மரியாதை வேட்டுக்களைத் தீர்த்து வரவேற்பளித்தனர்.
இதனைத் தொடர்ந்து விமான நிலைய விசேட அதிதிகள் பதிவேட்டில் ஈரானிய ஜனாதிபதி நிஜாத் கையெழுத்திட்ட பின்னர் இரவு 7.15 மணிக்கு விசேட வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்.
வாகனத் தொடரணி ஆரம்பிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு நீர்கொழும்பு வீதி போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக நேற்று மாலை 7 மணி முதல் 8 மணி வரையில் கொழும்பில் பல பாதைகளில் பெரும் வாகன நெருக்கடி காணப்பட்டதோடு ஈரான் ஜனாதிபதி அழைத்துவரப்படும் பிரதான பாதையில் பொதுமக்கள் எவருக்கும் நடந்து செல்லக்கூட பாதுகாப்புத் தரப்பு அனுமதிக்கவில்லை.
நேற்றிரவு கொழும்பு வந்தடைந்தவுடன் ஈரானிய ஜனாதிபதிக்கும் இலங்கை ஜனாதிபதிக்குமிடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இடம்பெற்றது.
இரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இருதரப்புப் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. 9 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈரான் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மாளிகையில் இராப்போசன விருந்தளித்து கௌரவித்தார்.
ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு கொழும்பு கலதாரி ஹோட்டலில் இலங்கையின் மதத் தலைவர்களை சந்தித்துப் பேசவிருக்கின்றார். இச்சந்திப்பில் 500க்கும் மேற்பட்ட மதத்தலைவர்கள் பங்கேற்கவிருப்பதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
இச்சந்திப்பை அடுத்து காலை 9 மணிக்கு சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய நவீனமயப்படுத்தும் வேலைகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக புறப்படுவார். இந்த வைபவம் காலை 9.30 மணிக்கு இடம்பெறும்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அங்கிருந்து உமாஓயா அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் பொருட்டு ஹெலிகொப்டர் விமான மூலம் வெள்ளவாயவுக்குப் புறப்பட்டுச் செல்வார். இவ்வைபவங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்வார்.
உமாஓயா அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் அங்கிருந்து ஹெலிகொப்டர் விமானத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு நேரே சென்று பிற்பகல் 12.45 மணிக்கு ஈரான் ஜனாதிபதி இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு புதுடில்லி பயணமாவார்.