நுவரெலியா மாவட்டத்தில் சாமிமலை வோல்டன் தோட்டப் பகுதிகளில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பெய்த இடியுடன் கூடிய கடும் மழையால் சுமார் 30 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடும் மழைவெள்ளத்தினால் இத்தோட்டத்திலுள்ள விநாயகர் ஆலயம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் தோட்ட தேயிலைத் தொழிற்சாலையிலும் பாடசாலைகளிலும் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ளனர்.
வோல்டன் தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 20 குடியிருப்புக்களைச் சேர்ந்தவர்கள் தேயிலைத் தொழிற்சாலையிலும் கவரவில கிராமப் பகுதியில் பாதிக்கப்பட்ட 17 குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் கவரவில தமிழ் மகா வித்தியாலயத்திலும் தஞ்சமடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை, மலையகப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாகப் பெய்துவருகின்ற அடைமழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நேற்று திங்கட்கிழமை நண்பகல் வரை அடைமழை பெய்தது.
நுவரெலியா மாவட்டத்தில் சாமிமலை பகுதியின் பிரதான ஆறு பெருக்கெடுத்ததனால் சாமிமலை கிறின்லைன் பார்ம் கிராம மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆற்றுவெள்ளம் கிராம குடியிருப்புக்குள் நுழைந்து சுமார் ஐந்து அடி உயரத்துக்கு நிரம்பியதாகவும் இதன்போது வீட்டுத்தளபாடப் பொருட்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் அட்டன் பகுதியில் பெய்த அடைமழையினால், ஆங்காங்கே சிறு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அட்டன் - கினிகத்தேனை பிரதான வீதியில் தியகல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
தலவாக்கலை, நுவரெலியா, டயகம, அக்கரப்பத்தனை, மஸ்கெலியா, பொகவந்தலாவை ஆகிய பகுதிகளில் பெய்த அடைமழையினால் விவசாயப் பயிர்ச் செய்கைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இந்த அடைமழை காரணமாக மலையகப் பாடசாலைகளில் நேற்று மாணவர் வருகை குறைவாகவே காணப்பட்டதாக பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மின்சார வசதிகள் இல்லாத பாடசாலைகளில் போதிய வெளிச்சமின்மையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிப்புக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மலையகப் பகுதிகளில் ஊற்றெடுக்கும் ஆறுகளில் வெள்ளநீர் அதிகரித்துக் காணப்பட்டது.