தென்னிலங்கையில் தொடர்ந்து கடும் மழை பெய்துவருவதுடன் இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருக்கிறது. பாரதூரமான நிலைமையையடுத்து அம்மாவட்டத்தில் "அனர்த்த நிலைமை" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் ஏழுபேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வெள்ள அனர்த்தத்தையடுத்து பாடசாலைகள் உடனடியாக மூடப்பட்டன. இம் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கிவிட்டன. ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை காலையும் பெரும் மழை பெய்தது. இதனால் இப்பகுதியிலுள்ள பெருமளவான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
இரத்தினபுரி நகரத்திலுள்ள, வறக்காதோட்ட வீதி, சிவிலி மைதானம், முத்துவ மற்றும் கரண்கொட பலாவெல, கிலிமலே, மல்வலை, பெல்மதுளை, தெனவக்க போன்ற பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.
இங்கிருந்து வெளியேறிய மக்கள் ஆலயங்களிலும், உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
இரத்தினபுரி நகரக் கடைகள், கார்கில்ஸ் பூட்சிட்டி, வியாபாரச் சந்தை உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
களுகங்கையின் நீர்மட்டம் 25 அடிவரை உயர்ந்துள்ளதால் இப்பகுதியிலுள்ள கட்டிடங்கள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.
இரத்தினபுரி, பலாங்கொடை, இறக்குவானை வீதிகளில் ஆங்காங்கே மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையாக கணக்கிடப்பட முடியாதுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கிலிமலே பகுதியில் மாணிக்கக்கற்கள் அகழ்வதற்காக சென்ற 8 பேர் இதுவரை திரும்பிவரவில்லையெனவும் இது தொடர்பான தேடுதல்களை பொலிஸார் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இறக்குவானை , கொடக்கவெல, காவத்தை பிரதேசங்களில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலையிலிருந்து பெய்துவரும் கடும் மழையினால் இப்பகுதிகளில் சிறுசிறு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், மரங்கள் முறிந்து பாதைகளில் விழுந்துள்ளமையால் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இதேவேளை, பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. வீதியோரங்களில் வெள்ளநீர் நிரம்பி காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
இதேவேளை, காவத்தை வளவை கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதுடன், பாடசாலை மாணவர்களின் வரவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.