ரொஷான் நாகலிங்கம்
இலங்கையின் பல பிராந்தியங்களில் தொடர்ந்து கடும் மழை பெய்துவருவதால் பல பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன், மண் சரிவுகளில் சிக்கி இதுவரை ஏழு பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
வெள்ளத்தால் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டம் மோசமாக பாதிக்கப்பட்டு அங்கு அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஞாயிறு மாலை இடம்பெற்ற மண்சரிவால் மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்திலுள்ள இங்கிரியாப் பகுதியில் மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
வீட்டின் மீது மண்சரிவு ஏற்பட்டதாலேயே இந்த ஆறு பேரும் மரணமடைந்துள்ளனர்.
இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டை நகருக்கு அண்மையில் இடம்பெற்ற மண்சரிவினால் பெண் ஒருவர் நேற்று திங்கட்கிழமை பலியானதுடன், இரு பிள்ளைகள் உட்பட4 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த மண்சரிவு நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் மீது மண் திட்டு வீழ்ந்து மூடியதால் அங்கிருந்த பெண் ஒருவர் பலியானதுடன் அவரது கணவர், இரு பிள்ளைகள் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் காயமடைந்தனர்.
அப்பெண்ணை மீட்பதற்கு தாமதமாகியதாலேயே அவர் பலியானதுடன் அவரது சகோதரி கடும் காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இரு பிள்ளைகள் உட்பட கணவரும் சிகிச்சையளிக்கப்பட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்த மண்சரிவினால் மருந்தகம், 4 வீடுகள் என்பன சேதமடைந்துள்ளதுடன் தொடர்ந்து மழை பெய்வதனால் மேலும் மண்சரிவு ஏற்படலாமென அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதேவேளை, அல்கொல்லப் பகுதியில் சிறு சிறு மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பீமலை எனுமிடத்தில் மாணிக்கக்கல் அகழ்வுக்கு சென்ற 8 பேர் இன்னமும் வீடு திரும்பவில்லை. பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கினிகத்தேனை- கொழும்பு வீதியில் கித்துல்கல எனுமிடத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பட்ட மண்சரிவினால் சில மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
இதனால் அட்டனிலிருந்து கொழும்புக்குச் செல்லும் வாகனங்கள் கினிகத்தேனையிலிருந்து நாவலப்பிட்டியினூடாக திருப்பப்பட்டது.
பெய்துவரும் கடும் மழையினால் வீதிகளில் வெள்ளநீர் நிரம்பிக் காணப்படுவதுடன் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.