ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஷேவாக் தலைமையிலான டில்லி அணி, பஞ்சாப் அணியிடம் நேற்று முன்தினம் தோல்வியடைந்தது.
இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சார்பில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 13 ஆவது போட்டி மொகாலியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஷேவாக் தலைமையிலான டேர் டெவில்ஸ் அணியும், யுவராஜ்சிங் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சந்தித்தன.
நாணயச் சுழற்சியில் வென்ற டில்லி அணி முதலில் ஆடியது. டில்லி அணியின் அதிரடி மன்னர்கள் கப்டன் ஷேவாக் (6 ஓட்டம், 6 பந்து), கம்பீர் (18 ஓட்டம், 14 பந்து) ஆகியோர் விரைவில் வெளியேறியதால், டில்லி அணி தடுமாறியது. பஞ்சாப் அணியின் பந்துவீச்சு அசத்தலாக இருந்தது. இதனால், எதிரணியின் ஓட்ட வேகம் கட்டுப்படுத்தப்பட்டது.
இருப்பினும் சொயிப் மாலிக் (19 ஓட்டங்கள்), மனோஜ்திவாரி (39 ஓட்டங்கள்), தினேஷ் கார்த்திக் (24 ஓட்டங்கள்) உள்ளிட்டோர் ஓரளவு சிறப்பாக ஆடியதால் டில்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களை எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் வி.ஆர்.வி. சிங் 3 விக்கெட்டுகளும், இர்பான் பதான் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள்.
அடுத்து ஆடிய பஞ்சாப் அணி முதல் ஓவரில் கோயல் (1 ஓட்டம்) விக்கெட்டையும், 2 ஆவது ஓவரில் சங்ககார(4 ஓட்டம்) விக்கெட்டையும் பறிகொடுத்தது. இதனால், நெருக்கடிக்குத் தள்ளப்பட்ட பஞ்சாப் அணிக்கு, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அவுஸ்திரேலியாவின் சைமன் கடிச் கைகொடுத்தார்.
அதிரடியாக விளையாடி 52 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 75 ஓட்டங்களை குவித்து கடிச் ஆட்டமிழந்தார். அவர் பெவிலியன் திரும்பியதும், கப்டன் யுவராஜ்சிங் பொறுப்பை உணர்ந்து அபாரமாக ஆடினார். இதனால், பஞ்சாப் அணி வெற்றி இலக்கை எளிதாக நெருங்கியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்ட போது, யுவராஜ்சிங் பவுண்டரி அடித்து வெற்றிக்கனியைப் பறித்தார்.
பஞ்சாப் அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கடைசி வரை களத்தில் நின்ற யுவராஜ்சிங் 40 ஓட்டங்கள் (29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். சைமன் கடிச் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
தனது முதல் 2 போட்டிகளில் ராஜஸ்தான் ரோயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளை தோற்கடித்த டில்லி அணிக்கு இது முதல் தோல்வியாகும்.
பஞ்சாப் அணிக்கு இது 2 ஆவது வெற்றியாகும். முன்னதாக மும்பை அணியை வீழ்த்தியது. அத்துடன், சென்னை மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளிடம் பஞ்சாப் தோல்வியைத் தழுவியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.