பழ.கருப்பையா
மாநிலங்களவைக்குத் தி.மு.க. வேட்பாளராக வசந்தி ஸ்டான்லி தேர்வு செய்யப்பட்டவுடன், `வேறு ஆளா கிடைக்கவில்லை; இவர்தானா கிடைத்தார்' என்ற கூக்குரல் செய்தித்தாள்களில் பெரிய அளவுக்கு எழுந்தது.
வசந்தி ஸ்டான்லி தயாரித்த போலி ஆவணங்கள், வங்கிகளை மோசடி செய்தவிதம், அவற்றின் காரணமாக அவர் எதிர்கொண்டுள்ள, கொள்ள வேண்டிய மோசடி வழக்குகள் இவையெல்லாம் பட்டியலிடப்பட்டன. ஒன்றிரண்டு பழமையான தேசிய உணர்வுள்ள செய்தித்தாள்கள் இந்த எதிர்ப்பை ஓர் இயக்கமாகவே நடத்தின.
வேட்பாளர் மாற்றப்படுவார் என்று தான் நாடே எதிர்பார்த்தது. வேட்பாளரும் பதைபதைத்தார்! ஆனால், நம் முதலமைச்சரின் நியாயங்கள் வேறு வகையாக இருந்தன.
"பிரதீபா பட்டீலை விடவா உன்மீது கூடுதலான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன? அவரே குடியரசுத் தலைவராகி விடவில்லையா? போய் வேலையைப் பார்!" என்று முதலமைச்சரே நியாயப்படுத்தி வசந்தி ஸ்டான்லினுடைய பதற்றத்தைத் தணித்தாராம்!
`திருடுவதும் ஒரு கலை' என்று மந்திரிகுமாரியில் வசனம் எழுதி, அதை ஒரு தத்துவம்போல் முன்னெடுத்து வைத்தவர் நம்முடைய முதலமைச்சர். `கலைஞர்' என்று கட்சியினரால் அடையாளம் காணப்பட்ட ஒருவர். `எதுஎதெல்லாம் கலை' என்று தெரியாமலா சொல்லியிருப்பார்!
பத்திரிகைகள் ஒரு மோசடி வழக்கினர்க்கு எதிராகப் போர் முழக்கம் செய்தது பத்திரிகை தருமம் என்றால், அரசியல் கட்சிகள் சொரணை கெட்டுப்போய் மௌனம் காத்தது கூட்டணி தருமமாம்!
வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்நாட்டிலாவது இத்தகைய வேட்பாளருக்கு வாக்களிக்க இயலாது என்று கூட்டணிக் கட்சிகள் முதலமைச்சருக்கு நெருக்கடி கொடுத்திருந்தால் அவர் பின்வாங்கியிருப்பார். பொதுவாழ்வின் தூய்மை கருதி இதைக் கூட்டணிக் கட்சிகள் செய்திருக்க வேண்டும்.
அப்போது ஒருவேளை முதலமைச்சர் கேட்டிருப்பார்:
`பிரதீபா பட்டீலைக் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்ய வாக்களித்தபோது, தூய்மைக் கோட்பாடு உங்கள் கட்சிகளில் கருக்கொண்டிருக்கவில்லையா?' என்று.
கூட்டணியில் சர்வதேசக் கட்சியிலிருந்து சாதாரணக் கட்சி வரை தங்கள் தங்கள் பங்கு என்ன என்று அலைமோதவே நேரம் சரியாக இருந்தபோது, இதற்கெல்லாம் ஏது நேரம்?
தேர்தலில் வாக்குகள் சிதறாமலிருக்கச் செய்துகொண்ட ஏற்பாட்டை வரம்பு மீறி நீட்டும்போது ஏற்படும் போதாமைகளை ஈடுகட்ட அவர்கள் முன்வைக்கும் புதிய தத்துவம் தான் கூட்டணி தருமம். வரம்பு மீறிய செயற்பாட்டு நிலைகளில் அது முரண்பாட்டில் சினையான தத்துவம் என்பது தெற்றென வெளிப்படுகிறது.
அந்தத் தத்துவத்தின் மூலம் அவர்கள் சொல்ல விரும்புவது `நேர்ந்து நிரவிப் போனால் தான்' கூட்டணி நிலைக்க முடியும் என்பதுதான்!
கூட்டணி மட்டுமில்லை; குடும்பங்கூட நேர்ந்து நிரவிப் போனால் தான் நிலைபெற முடியும்! ஆனால், வரம்புகள் மீறப்படுகின்றபோதும் நேர்ந்து நிரவிப் போவதென்றால், எல்லா நியாயங்களும் அழிந்து போகாவா?
சென்னை மாநகராட்சித் தேர்தலில் வாக்குப் பதிவின்போது மோசடி, நடந்தது என்று எதிர்க்கட்சியினரோடு இணைந்து கூட்டணிக் கட்சியான இடது பொதுவுடைமைக் கட்சியும் சொன்னது. இந்த மோசடியை உயர் நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் உறுதி செய்தது! நேர்ந்துவிட்ட அசிங்கத்தை மறைக்க மாநகராட்சி உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ராஜிநாமாக்கள் கோரப்பட்டு, மறுதேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டது.
ஆனால், உடனிருக்கும் கூட்டணிக் கட்சிகளின் பங்குகள் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டிருந்ததால், அவை இந்தத் தேர்தல் மோசடி குறித்து மௌனம் காத்தன.
இன்னும் சொன்னால் நமக்கும் சேர்த்துத்தானே இவற்றை எல்லாம் செய்கிறார்கள் என்று ஆளுங்கட்சியின் போக்கினை உள்ளுக்குள் பாராட்டியிருக்கவும் கூடும்!
அடுத்து வந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களில், அதிகாரிகளைக் கையில் வைத்துக் கொண்டு ஆளுங்கட்சியே எல்லாப் பதவிகளையும் கையகப்படுத்திக் கொள்கிறது என்றவுடன் கூட்டணிக் கட்சிகள் பெருங் கலகத்தில் ஈடுபட்டன. கூட்டுறவுத் தேர்தல்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
மாநகராட்சித் தேர்தல் மோசடிகளில் காணப்பட்ட கூட்டணிக் கட்சிகளின் முழுமனதான உடன்பாடு கூட்டுறவுத் தேர்தல்களில் முழு எதிர்ப்பாக மாறியதற்குக் காரணம், தீட்டிய மரத்தையே ஆளுங்கட்சி பதம் பார்த்தது என்பதுதான்!
எதிர்க்கட்சியை மோசடி செய்வது என்பது வேறு; கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து மோசடி செய்வது என்பது வேறு! அது கூட்டணி தருமத்திற்கு மாறானது என்பது உடனிருப்பவர்களின் கூக்குரல்!
இவர்கள் வகுத்து வைத்திருக்கிற கூட்டணி தருமத்தில் முதன்மைக் கட்சிகளோடு பிறிதொரு கட்சி மாறுபடக் கூடாது என்பதில்லை! மாறுபட்டால் தான் பேரங்கள் நடக்க முடியும்! அதேசமயத்தில் இன்னும் வருங்காலத்திலுள்ள பேரங்களையும் மனத்தினில் நினைத்து, ஒரு குறிப்பிட்ட நிகழ்காலப் பேரம் படியவில்லை என்றாலும் பொறுக்க வேண்டும், மானம் பாராட்டுவது கூட்டணி தருமத்திற்கு மாறானது! மானம் பாராட்டுவது என்றால் அடுத்த விமானத்திலேயே மகனோ மகளோ வீட்டுக்கு வந்துவிட வேண்டியதிருக்கும்
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரானவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று ஒரு நிலையில் ஊன்றிச் சொன்ன சோனியா காந்தி, பிறகு தலைகீழாகப் பல்டி அடித்து, அவருடைய கருத்துப்படி நாட்டின் வளர்ச்சியைப் பலி கொடுக்கத் தயாரானது எதற்காக? கூட்டணி தருமத்தைக் காப்பதற்காகத்தான்!
`அணுசக்தி ஒப்பந்தமா முக்கியம்? அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதல்லவா முக்கியம்!" என்று சோனியாவின் பல்டியைக் கருணாநிதி பாராட்டியது எதற்காக? கூட்டணி தருமத்தைப் பாதுகாத்துவிட்டார் என்பதற்காகத்தான்.
எப்போதும் தன் உண்மையான மனவோட்டங்களை மறைத்துச் சாதுரியமாகப் பேசும் கருணாநிதி, இந்த வாக்குமூலத்தில் பச்சையாக வெளிப்பட்டுவிட்டார் என்றாலும், அதற்காகவெல்லாம் வெட்கப்பட்டால் வேலைக்கு ஆகுமா?
சிக்குப்பிடித்த பரட்டைத் தலைக்குச் சிறிதளவு எண்ணெய்கூடக் கிடையாது. ரேஷன் கடையில் `ஆளுங்கட்சித் தருமவான்கள்' அயல்மாநிலங்களுக்குக் கடத்தியதுபோக அளந்த புழுத்த அரிசியில் வடித்த கஞ்சிக்குக் கடித்துக்கொள்ள வெங்காயம் தவிர மாற்று வெஞ்சணம் (கூட்டு, பொரியல்) கிடையாது. தலைக்கு மேலே கூரை கிடையாது. கூவத்தின் மணத்திலும் கொசுக்களின் தாலாட்டிலும் துயிலும் குப்பம்மாளின் தலைவருமானம் அரை டொலர்; அதாவது வெறும் இருபது ரூபாய்!
நாட்டின் பொருளாதார வளர்ச்சி எட்டு விழுக்காடு என்று தம்பட்டம் அடிக்கிறாரே சீமான்களின் முகவராகச் செயல்படும் ப. சிதம்பரம்! அதிலே குப்பம்மாளுக்குப் போய்ச் சேர்ந்தது எவ்வளவு என்று எப்போதாவது கூறியதுண்டா?
பன்னாட்டு முதலாளிகளின் பாதுகைகளைத் டில்லி செங்கோட்டையில் அவர்களின் பதிலிகளாய் வைத்து நாடாளுகிறவர்களை எதிர்த்து அஞ்சல் பெட்டி தொங்குகிற இடங்களிலெல்லாம் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, மறுநாள் நாடாளுமன்றத்திற்கு மூச்சிறைக்க ஓடி, அவர்கள் கவிழ்ந்து விடாமல் இடது பொதுவுடைமைக் கட்சி கைதூக்குவது எதற்காக? கூட்டணி தருமத்தைக் காப்பதற்காகத்தான்!
அஞ்சல் பெட்டிகளின் முன்னாள் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வது இடது பொதுவுடைமையரின் `சுயதருமம்'! பெருமுதலாளிகளின் முகவர்களாகத் தொடர்ந்து செயல்பட காங்கிரஸ் ஆட்சிக்குக் கைதூக்குவது இடது பொதுவுடைமையரின் `கூட்டணி தருமம்!'
மதவாதத்தை அதிகார மையத்திலிருந்து தள்ளிவைக்கத்தான் இந்தக் கூட்டணி தருமம் கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் குஜராத்தில் மோடியைத் தள்ளி வைக்க முடியவில்லையே, ஏன்?
காங்கிரஸின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே மோடி ஆட்சிக்கு வர வழிவகுத்தது என்றால், அதற்குத் தொடர்ந்து கைதூக்குவதன் மூலம் இன்னம் பல மாநிலங்களில் மோடிகள் ஆட்சிக்கு வந்துவிட மாட்டார்களா?
துரியோதனாதியரிடம் பாண்டவர்கள் பாஞ்சாலியை அடகு வைத்ததுபோல் ஆகிவிட்டது பல கட்சிகளின் நிலைமை!
முதன்மைக் கட்சிகள் அதிகாரத்திலிருந்து செய்யும் கொடுமையான தவறுகளைக் கூடத் தட்டிக் கேட்க முடியாத நிலை ஏற்பட்டு, (ஸ்டான்லி, பிரதிபா பாட்டீலின் தேர்வு அதில் ஒரு பகுதிதான்) பொதுவாழ்வைக் களங்கப்படுத்துவதற்கும் ஊனப்படுத்துவதற்கும் துணைபோய் `கூட்டணி தருமம்' என்னும் பெயரால் `சுயதருமத்தை' இழந்ததுதான் கடைசியில் ஒன்றிரண்டு நல்ல கட்சிகளும் கூடக் கண்ட பலன்!
-தினமணி-