Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 03, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
அரச நிறுவனங்களில் ஊழல் மோசடிகள்
[03 - April - 2008] [Font Size - A - A - A]
அரச நிறுவனங்களில் இடம்பெறுகின்ற ஊழல், முறைகேடுகள், மோசடிகள் தொடர்பில் 2007 ஆம் ஆண்டில் மாத்திரம் 2,166 முறைப்பாடுகள் ஜனாதிபதி விசாரணைப் பிரிவுக்குக் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பிரகாரம் கடந்த வருடத்தில் நாளொன்றுக்கு ஐந்து ஊழல் மோசடி முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. பாடசாலைகளுக்கு பிள்ளைகளைச் சேர்த்தல், நெடுஞ்சாலை அபிவிருத்தி, பாலங்கள் நிர்மாணித்தல் உட்பட பல்வேறு மட்டங்களிலும் நாளாந்தம் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அரச ஊழல் மோசடி என்ற வார்த்தை 1970 ஆம் ஆண்டு வரை இந்த நாட்டில் பெருமளவுக்கு தெரியாததொன்றாகவே காணப்பட்டது. 1970 இல் ஐக்கிய முன்னணி அரசு பதவிக்கு வந்தது முதல் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச வளங்களை கொள்ளையடிக்கத் தொடங்கினர். இது படிப்படியாக வளர்ச்சியுற்று நாட்டிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் உயரதிகாரிகள் முதல் சாதாரண பியூன் வரை ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவண்ணமே உள்ளனர். கூட்டுறவுக் கடையில் முகாமையாளர் கைவரிசையைக் காட்டுகிறார். கூட்டுத்தாபனங்களில் தலைவர்கள் சுரண்டுகின்றனர். இப்படியே அனைத்து மட்டங்களிலும் அரச வளங்கள் கொள்ளையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் புதுமை என்னவெனில், ஒரு துண்டு மாசிக் கருவாடு முதல் கொண்டு இடுப்பில் செருகிக் கொண்டு போகும் வெட்கக்கேடான சம்பவங்களும் இடம்பெற்று வருவதுதான்.

1977 வரை சிறிய அளவில் இடம்பெற்றுக் கொண்டிருந்த இந்த அரச ஊழல் மோசடிகள் அந்த ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதார கொள்கை காரணமாக கோதுமை மா கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து ஐந்து, ஆறு லொறிகளாக கை மாறத் தொடங்கியது. அரிசி, சீனி, பருப்பு உட்பட அனைத்தும் பெரும் தொகையாக கொள்ளையிடப்பட்டன. இந்த ஊழல் மோசடிகள் பகற்கொள்ளையாகவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

1985 ஆம் ஆண்டில் ஒரு அமைச்சர் ஊடகவியலாளர் மாநாடொன்றில் தெரிவித்த கருத்து இங்கு நினைவு படுத்திப்பார்க்க வேண்டியதொன்றாகும். "எனது அமைச்சு மூலம் ஒரு அபிவிருத்தித் திட்டத்துக்காக இரண்டாயிரம் ரூபா தேவைப்பட்டால் நான் அதற்காக மூவாயிரம் ரூபாவை ஒதுக்கிக்கொடுப்பேன். ஏனெனில், இரண்டாயிரம் ரூபாவை ஒதுக்கினால் உரியவேலை பூரணமாக நிறைவேற்றப்படப் போவதில்லை. ஆயிரம் ரூபாவை அதிகாரிகள் மோசடி செய்தால் காரியம் முற்றுப் பெறாது. மூவாயிரம் ரூபாவை ஒதுக்கினால் ஆயிரம் ரூபாவை அதிகாரிகள் சுரண்டினாலும் இரண்டாயிரம் ரூபா உரிய தேவைகளுக்குப்பயன்பட்டு விடும். அதற்காகவே இப்படியான முடிவை தான் எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 1980 க்குப் பின்னர் ஆரம்பித்த யுத்தம் கூட பாரிய நிதி மோசடிக்காக பெற்றுக் கொடுக்கப்பட்ட `தங்கத்திறப்பாக'வே கருதவேண்டியுள்ளது. யுத்தத்தின் மூலமாக பெரும்புள்ளிகள் கொள்ளையடிக்கும்போது சாதாரண அரச ஊழியர்கள் ஏனைய துறைகளில் தமது கைவரிசையை காட்டுகின்றனர்.

இந்த அவலம் நாட்டில் தொடர்ந்து கொண்டே போனால் நாட்டின் எதிர்காலம் எவ்வாறாக அமைந்து விடும் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும். 2007 இல் 2166 முறைப்பாடுகள் கிட்டியுள்ளன. முறையிடப்படாத ஊழல் மோசடிகள் எத்தனை ஆயிரம் இருக்கலாம் என்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. பாழாய்ப்போன இந்த ஊழல் மோசடிகளுக்கு எப்போதுதான் முற்றுப் புள்ளி வைக்கப்போகின்றோம். ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்காக ஆணைக்குழுக்களும் விசாரணைக் குழுக்களும் நியமிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் அவை உரிய தீர்வைப் பெற்றுத் தருவதாகத் தெரியவில்லை. விசாரணை என்ற பெயரில் காலம் கடத்தப்பட்டுக் கொண்டே போகின்றது. இந்த வலையிலிருந்து சுறாமீன்கள் தப்புகின்றன. நெத்தலிகள் அல்லது சின்னச் சுண்டெலிகள் மட்டுமே மாட்டிக் கொள்கின்றன. நெத்தலிகளையும் சுண்டெலிகளையும் பெரிதுபடுத்திக்காட்டி ஊழல் மோசடிகளுக்கெதிரான நடவடிக்கை என்று காண்பித்து பெரும்புள்ளிகள் தப்பிக் கொள்கின்றன.

இந்த பேரவலம் தொடர்ந்து கொண்டே போனால் எமது நாடு மிக விரைவில் முற்று முழுதான பிச்சைக்கார நாடாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப் பிச்சைக்கார நாடாகும் போது கூட பிச்சையிலும் கூட ஊழல் மோசடிகள் இடம்பெறாது என்பதில் என்ன நிச்சயம் இருக்கப்போகின்றது. நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற மனப்போக்கிலிருந்து அரச அதிகாரிகளும் ஊழியர்களும் மனநிலையை மாற்றிக் கொள்ளாத வரை இந்த மண்ணுக்கு மீட்சி என்பது `கானல் நீராகவே' இருக்கும்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com