* கொண்டலீசா ரைஸ் திருப்தி
மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சரியான திசையை நோக்கி பயணிப்பதாக அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2009 ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் பதவி விலகுவதற்கு முன்னர் இறுதிக் கட்ட உடன்படிக்கைகளை அடைந்துவிடலாம் என்பதிலும் தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக புஷ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களுடன் மேற்கொண்ட பேச்சுக்களுக்கு பின்னரே ரைஸ் இக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஜோர்தானிய தலைநகர் அமானில் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸுடன் சந்திப்புக்களை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த ரைஸ், கடந்த நவம்பரில் அன்னபொலிஸில் நடைபெற்ற மாநாட்டில் அமைதி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தனது கவனம் முழுவதும் அந்நடவடிக்கைகளின் பக்கமே திசை திருப்பப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் ஜெருசலேமில் இஸ்ரேலியப் பிரதமர் எஃகுட் ஒல்மோர்ட், இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் மற்றும் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபடும் பாலஸ்தீன குழுவின் உயர் மட்ட பிரதிநிதிகள் ஆகியோருடனும் ரைஸ் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
இவ்வருடத்திற்குள் அமைதி உடன்படிக்கையை ஏற்படுத்த முடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ள அப்பாஸ், இதனைப் பெறுவதற்கு அனைத்து தரப்பும் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி இஸ்ரேலியப் பிரதமரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேற்குக்கரையிலும் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியிலும் இஸ்ரேல் புதிய குடியிருப்புத் திட்டங்களை அமைத்து வருவதன் மூலம் அமைதி நடவடிக்கைகளை பாதிக்கும் மோசமான தவறுகளை இஸ்ரேல் மீண்டும் மீண்டும் செய்வதாக அமைதிக்கு ஆதரவான தன்னார்வ அமைப்பொன்று எச்சரித்துள்ளது.