யாழ்.மாவட்டத்திலுள்ள தொண்டராசிரியர்களை நிரந்த ஆசிரியர் நியமனத்தினுள் உள்ளீர்ப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் பல்வேறு குழறுபடிகளுள்ளதாக பாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் மனித உரிமைகள் அணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்திலுள்ள கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகளுக்கு எதிராகவே இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கல்வித் தகைமை உள்ளவர்களுக்கும் பாடசாலைகளில் நீண்டகாலம் கற்பித்தவர்களுக்கும் நியமனம் வழங்காமல் எவ்விதமான தகைமைகளோ கற்பித்தல் அனுபவங்கள் அற்றவர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதேவேளை, யாழ்ப்பாணக் கல்வித்துறையைச் சேர்ந்த பல அதிகாரிகளுக்கெதிரான முறைப்பாடுகள் தமக்கு வந்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகம் தெரிவித்துள்ளது.