சவூதி அரேபியாவில் சித்திரவதைக்குள்ளான நிலையில் நாடு திரும்பிய கிண்ணியாவைச் சேர்ந்த அப்துல் றெசாக் நளீரா என்ற யுவதி திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2006-06-28 ஆம் திகதி பணிப்பெண்ணாக சவூதி அரேபியா சென்ற இந்த யுவதி றியாத் நகரில் வீடொன்றில் பணியாற்றியுள்ளார். எனினும், இவருக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. இது குறித்து கேட்டபோதே சித்திரவதை ஆரம்பித்துள்ளது.
இது குறித்து யுவதியின் பெற்றோர்களால் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. தூதரக அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியின் பலனாக 10 மாதச் சம்பளம் மட்டும் பெற்றுக்கொடுக்கப்பட்டதோடு தூதரகத்தின் ஊடாக இந்த யுவதி நாட்டுக்கும் அனுப்பிவைக்கப்பட்டார்.
இவரின் உடலில் அடிகாயத் தழும்புகளும் ஸ்திரிக்கை பெட்டியால் சுடப்பட்ட தழும்புகளும் காணப்படுகின்றன. இவர் தற்போது திருகோணமலை பொதுவைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணரின் மேற்பார்வையிலுள்ள 8 ஆம் வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அசிட் கலந்த திரவமொன்று இவருக்கு அருந்தக் கொடுக்கப்பட்டுள்ளதால் இவரது குடல் அழுகிய நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வைத்தியசாலைப் பொலிஸார் இவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
இவரது எதிர்காலம் மிகவும் பரிதாபமான நிலையிலுள்ளது. இது குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சவூதி அரேபியத் தூதரகம் ஆகியவற்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இது குறித்து சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கொழும்பு சட்ட உதவி மன்றுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.