* பிரதியமைச்சர் சச்சி
இலங்கையில் சிறுபான்மையினருடைய உரிமைகள் மீறப்பட்டமையின் விளைவாகவே யுத்தம் ஏற்பட்டதாக பிரதிக் கல்வியமைச்சர் எம்.சச்சிதானந்தன் தெரிவித்தார்.
கல்வியமைச்சில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற யுனெஸ்கோ நிறுவனத்தின் சமாதானக் கல்வி தொடர்பான கூட்டத்தில் உரையாற்றிய பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தாவது,
"யுனெஸ்கோ நிறுவனம் சமாதானக் கலாசாரத்தை உருவாக்குவதனை தன்னுடைய பணிகளில் ஒன்றாக கொண்டுள்ளது. இலங்கையில் இந்நிறுவனம் பாடசாலை மாணவர்களுக்கு சமாதானக் கல்வியை வழங்கி இந்த நாட்டிற்கு மிகவும் அவசியமானதாகவும் அவசரமாகவும் தேவைப்படும் சமாதானத்தினை உருவாக்கமுடியுமென நம்பி செயற்படுகின்றது.
சமாதானத்தைப் பற்றி கதைக்கின்றபோது இரண்டு பிரதான வினாக்கள் ஒவ்வொருவருடைய மனதிலும் தோன்றலாம்.
முதலாவதாக யாருக்கு சமாதானம் தேவைப்படுகின்றது என்பதும், இரண்டாவது எவர் மூலம் இந்த சமாதானத்தினை ஏற்படுத்துவது என்பதாகும். இலங்கையின் கல்வித்துறையை பொறுத்தவரையில் ஏறக்குறைய 40 இலட்சம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அவர்களுக்கு கல்வி புகட்டும் பணியிலும் கல்வி நிர்வாகப் பணியிலும் 3 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் சம்பந்தப்படுகின்றனர். இவர்களை சம்பந்தப்படுத்தி யுனெஸ்கோ நிறுவனம் சமாதானத்திற்கு தன்னாலான பங்களிப்பை செய்து வருகின்றது. சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஆறு அணுகுமுறைகள் இதுவரை ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு முறைதான் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் சமாதான விதையை நட்டு ஒவ்வொரு மனிதனையும் சமாதான விரும்பியாக மாற்றியமைத்தல் ஆகும். யுத்தத்தின் ஆரம்பம் மனித மனம்தான் என்பது இவ் அணுகுமுறையினை முன்வைத்தவர்களின் நம்பிக்கையாகும்.
இந்தநாடு பல இனங்களை, பல மதங்களை, பல கலாசாரங்களை, வேறுபட்ட மொழிகளை, கொண்ட மக்கள் வாழும் நாடாகும். எமது அயல் நாடான இந்தியாவும் எம்மைவிட பல்வேறு இன, மத,மொழி, கலாசார பிரிவினரைக் கொண்ட நாடாகும். அந்நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தி அகிம்சையை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்து அந்த நாட்டு மக்கள் சமாதான விரும்பிகளாக வாழ வைப்பதிலும் வெற்றி கண்டுள்ளார்.
அந்நாட்டின் தாரக மந்திரமாக அமைவது வேற்றுமையில் ஒற்றுமையாகும். அந்நாட்டு மக்கள் எண்ணிலடங்கா வேற்றுமைகளை மதித்து ஒற்றுமையுடன் வாழும் ஒரு சமாதான கலாசாரத்தை உருவாக்கி உள்ளனர். அந்நாட்டின் உயர் சட்டமாகிய அரசியல் அமைப்புச் சட்டத்தினை உருவாக்கும் பணியினை பின்தங்கிய சமூகத்தை சேர்ந்தவரென கூறப்படும் டாக்டர் அம்பேத்காரிடம் ஒப்படைத்தனர். அந்த நாட்டு அரசியல் திட்டம் உருவாக்கப்படுகின்றபோது எந்த அளவிற்கு சிறுபான்மையினருடைய உரிமைகள் உயர்ந்த அளவில் பாதுகாக்கப்படவேண்டுமோ அந்தளவுக்கு அந்நாட்டவரின் கவனம் அதன் பால் ஈர்க்கப்பட்டது.
காந்தி, அம்பேத்கார் போன்றவர்களுடைய தூர நோக்கு அந்நாட்டில் சமாதான கலாசாரத்தை கட்டியெழுப்ப உதவியுள்ளது. காந்தி அகிம்சையை ஆயுதமாகப் பயன்படுத்தியமையால் அந்நாட்டில் அகிம்சா வழியில் தமது நோக்கங்களை அடைந்து கொள்வதில் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். யுனெஸ்கோ நிறுவனமும் மகாத்மா காந்தி, மார்டின் லூதர்கிங் போன்றவர்கள் தமது இலக்கை அடைவதற்காக என்ன முறையை பயன்படுத்தினார்களோ அதே அணுகுமுறையை யுனொஸ்கோவும் பின்பற்றுகின்றது என நான் நம்புகின்றேன்.
சமகாலத்தில் மனித உரிமைகள் பற்றி பிரபல்யமாக பேசப்படுகின்றது. மனிதனிடம் இருந்து பிரித்து எடுக்கப்பட முடியாத ஒரு விடயம் இந்த உரிமைகள் என்பது சர்வதேச சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். யுத்தம் நடைபெறும் நாடொன்றில் மனித உரிமைகள் மீறப்படுதல் தவிர்க்க முடியாது என்பது சிலரின் கருத்தாகும். அதாவது மனித உரிமை மீறல் யுத்தத்தின் விளைவு, ஆனால் நாம் வேறுவகையில் பார்க்கும் போது எமது நாட்டில் சிறுபான்மையினருடைய உரிமைகள் மீறப்பட்டமையின் விளைவே யுத்தமாகும்.
இனங்களுக்கிடையே பாரபட்சம் காட்டப்படுமாயின், இனங்கள் சமமாக மதிக்கப்படாவிட்டால், மனிதனின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால் முரண்பாடுகள் உருவாகி அது பின்னர் வன்முறையாகி அந்த வன்முறை பரந்த அளவில் இடம்பெறும் பொழுது அது யுத்தமாகிவிடும். கல்வித்துறையிலும் கூட இன ரீதியாக சமமான கவனிப்பு இடம்பெறாவிட்டால் அங்கு சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படும் நிலை உருவாகும். சிறுபான்மையினர் தமது அபிலாசைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் கல்வி நிர்வாகத்தில் அதிகாரம் பன்முகப்படுத்தப்படல் வேண்டும்.
தமிழ் மொழிப்பாடசாலைகளின் தேவைகள் இனங்காணப்பட்டு அப்பாடசாலைகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட கல்வி அமைச்சில் தனியான தமிழ்ப் பிரிவு அமைக்கப்படல் வேண்டும். இந்திய அரசியல் அமைப்பில் திருத்தங்களை கொண்டுவரும் சந்தர்ப்பங்கள் அனைத்திலும் எவ்வாறு சிறுபான்மையினருடைய பிரச்சினைகள் யாவை, அதனை தீர்க்க நிர்வாக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எத்தகைய நடவடிக்கைகளினையும் மேற்கொள்ளலாம் என்பதில் கவனத்தை செலுத்தி வந்துள்ளது. இலங்கையிலும் அவ்வாறான ஒரு சிந்தனை வளரவேண்டும்.
ஆரம்ப காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர் அனைவரும் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பறையில் ஒன்றாகக் கல்வி கற்றனர். ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வு இருந்தது. பின்னர் இவர்கள் பிரித்து விடப்பட்டனர். கடந்த காலங்களில் இம்மூன்று இனத்தவர்களிடையே இடைவெளி ஏற்படுத்தப்பட கல்வி முறைமையும் காரணமாக இருந்துள்ளது. இனங்களிடையே ஒற்றுமையினை கட்டிக்காப்பதன் முக்கியத்துவத்தை அறியாத பலர் கல்வி கற்றவர் மத்தியிலும் உள்ளனர். எல்லா இனத்தவர்களையும் சமமாக மதித்து எல்லா இனத்தவர்களின் தேவையையும் நிறைவேற்றும் போது முரண்பாடு தலைதூக்காது. ஆனால் கடந்த காலங்களில் இனங்களிடையே பாரபட்சம் காட்டப்படுதலின் காரணமாக மோதல் ஏற்பட்டு அது உள்நாட்டு யுத்தமாக வளர்ந்துவிட்டது.
இதன் பின்னராவது சமாதானத்தை விரும்பும் ஏனைய இனத்தவர்களுடைய தேவைகளையும் அபிலாசைகளையும் மதிக்கும் நல்ல மனப்பாங்குடைய மாணவர்கள் பாடசாலைகளில் உருவாக்கப்பட வேண்டும். வன்முறைகள் அற்ற சமாதான கலாசாரம் ஒன்று கட்டியெழுப்பப்பட்டால் மாத்திரமே இலங்கையில் மனித நேயம் உயிர்வாழ முடியும். இலங்கை மீதுள்ள அவப்பெயர் நீக்கப்பட முடியும். இலங்கையில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் மனித உரிமைகள் பேணப்படும் சூழ்நிலை உருவாகும். இலங்கையைப் பொறுத்தவரையில் சமாதானத்தை ஏற்படுத்துவது என்பது மிகவும் பொறுப்புள்ள பாரிய பணியாகும். மேலோட்டமான வேலைத்திட்டங்களினால் இதனை சாதிக்க முடியாது. சமாதானக் கல்வியை வழங்குபவர்கள் மிகவும் பொறுப்புடனும் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் மாத்திரமே இது சத்தியமாகும், என்றார்.