* அமைச்சர் மகிந்த விஜயசேகர
தமிழ்ச் சிறுபான்மையினருக்கு இன்று ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இன்னும் சிறிது காலத்தில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் ஏற்படலாம் என்று தெரிவிக்கும் அஞ்சல் தொலைத் தொடர்புகள் அமைச்சர் மகிந்த விஜேசேகர, தமிழர்களுக்கு இந்த நாட்டில் பிரச்சினைகள் இருப்பதையும் ஒப்புக் கொண்டார்.
இலங்கை வங்கியின் "கிராம உதான" திட்டத்தை அக்குரஸ்ஸவில் ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர்;
"இந்த நாட்டிற்குள் முதலில் வந்தவர்கள் போர்த்துக்கேயர் . அதன் பின்னர் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் வந்தனர்.
அப்போது நாட்டின் ஒரு பகுதியை தமிழர்கள் ஆட்சி செய்து வந்ததாகச் சிலர் கூறிவருகின்றனர். ஆனால், அப்படியாக தமிழர்கள் இங்கு ஒரு பகுதியை ஆண்டதாக கூறுவதில் எதுவித உண்மையுமே இல்லை. முழு நாட்டையும் பௌத்த சிங்களவர்களே ஆண்டனர். தமிழர் இராச்சியம் என ஒன்று இருக்கவில்லை. இதுவே வரலாறு.
தற்போது நடைபெறுகின்ற உள்நாட்டுப் போரில் வெளிநாடுகளுடன் போர் புரியவில்லை. நீண்ட காலமாக அர்த்தமில்லாமல் இந்த நாட்டின் இரு பகுதி மக்களுக்கு இடையில் நடைபெறும் யுத்தமே இது.
இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் பௌத்தர்களே. பௌத்தர்களுக்கு வழங்கும் அதே அகப்பையினால் தங்களுக்கும் வழங்குமாறு சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும் கேட்கின்றனர். ஆனால், சிறுபான்மையினருக்கு இரண்டாவது அகப்பையினால் பகிர்ந்து வழங்கும்போது தான் பிரச்சினைகள் எழுகின்றன.
இந்த நாட்டை ஆட்சி செய்த ஆங்கிலேயர் , ஒல்லாந்தர், போர்த்துக்கீசரும் தனி இராச்சியம் கேட்கலாமே . அவர்கள் ஏன் கேட்கவில்லை?
இன்று உலகில் 5 கோடி படித்த தமிழர்கள் வாழ்கின்றனர். அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஆதரித்து பல கோடி ரூபாவை அவருக்கு வழங்கி தமிழ் இராச்சியம் ஒன்றை உருவாக்க தயாராகி வருகின்றனர்.
1987 ஜூலை மாதம் அன்றைய ஜனாதிபதி ஜே ஆரும், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் கைச்சாத்திட்ட இலங்கை- இந்திய சமாதான உடன்படிக்கைக்கு எதிராக நானும் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அன்று கொழும்பில் எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்தோம். ஷ்ரீமாவோ அம்மையாரின் வேண்டுகோளின்படி நாம் செய்தோம்.
இன்று அந்த இந்திய- இலங்கை சமாதான உடன்படிக்கை ஒழிக்கப்பட்டுவிட்டது. அதற்காக நாம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நன்றிகூறி அவரைக் கௌரவிக்க வேண்டும்" என்றார்.