* மூதூர் படுகொலை விசாரணையில் சாட்சியம்
யோ. நிமல்ராஜ்
பொதுமக்களும் அரச ஊழியர்களும் மூதூரிலிருந்து இடம்பெயரும் போது இப்பதினேழு பேரும் இடம்பெயர்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லையென இக்கொலை வழக்கின் சாட்சி ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூதூரிலுள்ள அக்ஷன்பாம் நிறுவன அலுவலகத்தில் 17 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவால் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப கட்டிடத் தொகுதியில் இடம்பெறுகிறது.
இதுவரை இவ்வழக்குகள் நடைபெறும் போது சர்வதேச சுயாதீன நிபுணர் குழுவினரின் சட்டத்தரணிகளும் அதன் அங்கத்தவர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.
ஆனால், செவ்வாய் நடைபெற்ற விசாரணைகளின் போது இவர்கள் சமுகமளிக்காத நிலையில் விசாரணை தொடர்ந்தது.
கண்காணிப்புப் பணிகளை அவ்வமைப்பினர் நிறுத்திக் கொண்டதாக அவர்கள் திங்கட்கிழமை உத்தியோக பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து இவர்கள் இவ் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு சமுகமளிக்கவில்லை.
செவ்வாய் சாட்சியத்தின் போது படுகொலை செய்யப்பட்ட துரைராஜா பிரதீபன் சார்பில் அவரது உறவினர் ஒருவரே சாட்சியம் வழங்கியிருந்தார்.
அச்சாட்சி மேலும் தெரிவிக்கையில்;
"படுகொலை செய்யப்பட்ட பிரதீபன் தனது க.பொ.த. சா/த பரீட்சையை நிறைவு செய்த பின்னர் தொழில்நுட்பக் கல்லூரியில் படவரைஞர் கற்கை நெறியையும் கணினிக் கற்கை நெறியையும் நிறைவு செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நிகாப் என்ற அமைப்பில் ஒன்றரை வருடகாலமாகப் பணியாற்றினார்.இந்நிலையில், தனது கணினிக் கற்கையினை மேலும் தொடர வேண்டுமென்ற காரணத்தால் கொழும்பில் கணினிக் கற்கையை 2004- 2005 காலப்பகுதியில் ஒருவருடத்திற்குத் தொடர்ந்தார்.அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் அக்ஷன்பாம் நிறுவனத்தில் வெளிக்கள உத்தியோகத்தராகப் பணியில் சேர்ந்தார்.
திருகோணமலையிலுள்ள அக்ஷன்பாம் தலைமைச் செலயகத்திலும் மூதூரிலும் கடமையாற்றினார்.
எமது இல்லத்திலிருந்து 700 மீற்றருக்கு உட்பட்ட பகுதியில் திருகோணமலை அக்ஷன்பாம் அலுவலகம் உள்ளது.
அவ்வலுவலகத்தில் பணியாற்றிய அனைவரையும் எனக்குத் தெரியாது. அத்துடன், அவரது நண்பர்களிலும் அனைவரையும் எனக்குத் தெரியாது.
ஆனால், திருகோணமலை அலுவலகத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் கண்ணன் என்பவரை இச்சம்பவம் இடம்பெற்ற பின்னர் தான் தெரியும்.
ஆனால், அவர் திருகோணமலை அலுவலகத்திலா மூதூர் அலுவலகத்திலா நிரந்தரமாகப் பணியாற்றுகின்றாரெனத் தெரியாது.
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி நான் அவருடைய கைத்தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திக் கதைத்தேன். அன்றைய தினம் தான் அவர் மூதூருக்குச் சென்றிருந்தார்.
வழமையில் திங்கள் பணிக்குச் சென்று வெள்ளி மாலை தான் வீடுதிரும்புவார்.
முதலாம் திகதி அன்று மாலை எமது தொலைபேசியிலிருந்து அழைப்பை ஏற்படுத்தி அவருடன் கதைத்தோம். நாமே அழைப்பை ஏற்படுத்தி அவருடன் கதைத்த போது அங்கு ஏதாவது பிரச்சினையா என்று கேட்டபோது அங்கு எதுவிதமான பிரச்சினையும் இல்லை என்றும் தாம் சுகமாக இருப்பதாகவும் கூறினார்.
ஆனால், முதலாம் திகதி பகல் 12.45 க்குப் பின்னரே மூதூரில் பிரச்சினை ஆரம்பித்தது. வெடிச்சத்தங்களை எம்மால் கேட்க முடிந்தது.
அங்கு தொடர்ந்தும் பிரச்சினையாக இருந்ததாலேயே நான் தொடர்ந்து அழைப்பை ஏற்படுத்தி இருந்தேன்.அனேகமாக மாலை 6.30 தொடக்கம் 7.30 மணி வரையான நேரமே நான் அவருடன் கதைப்பேன்.
இரண்டாம் திகதி மாலை நான் அழைப்பை மேற்கொண்ட போது வெடிச்சத்தங்கள் கேட்பதாகவும் ஷெல் வந்து விழுந்தாலே தமக்கு ஆபத்து என்றும் தெரிவித்தார்.
அத்துடன், வெடிச்சத்தங்கள் கேட்கும் அதேநேரம், இருதரப்பினரிடையேயான மோதல்கள் கடுமையாக நடைபெறுவதால் தமக்குப் பயமாக இருப்பதாகவும் கூறினார்.
அவர்கள் கடல் மார்க்கமாகவோ மட்டக்களப்பினூடாக தரைமார்க்கமாகவோ வர முயற்சிப்பதாக தெரிவித்தனர்.
அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையில் நாம் திருகோணமலை அலுவலகத்துடன் தொடர்புகொண்டிருக்கவில்லை.
மூன்றாம் திகதி வருவாரென எதிர்பார்த்தோம். ஆனால், வரவில்லை. அதனைத் தொடர்ந்து அவருடைய கைத்தொலைபேசிக்கு முயற்சித்தும் இணைப்புக் கிடைக்கவில்லை.
இந்நிலையிலேயே திருகோணமலை அலுவலகத்துடன் தொடர்புகொண்டபோது அவர் வேறு ஒரு கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை தந்தார். அன்றிரவு எட்டு மணியளவில் அந்த இலக்கத்தின் மூலம் அவருடன் கதைக்கக்கூடியதாக இருந்தது.
அப்போது அவர் வெடிச்சத்தங்கள் மிகவும் அருகில் கேட்பதாகவும் மோதல் உக்கிரமடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் நான்காம், ஐந்தாம் திகதிகளில் திருகோணமலை அலுவலகத்திற்குச் சென்று அவர்களை அழைத்துவரும்படி கேட்டபோது தாம் சென்றதாகவும் குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் பயணிக்க முடியாதிருப்பதாகவும் தெரிவித்தனர்.அங்கு அப்போது கறுப்பின வெளிநாட்டவர் ஒருவர் தான் இருந்தார். ஆனால், எவரும் மூதூர் நிலைவரம் பற்றியும் பதினேழு பேரின் நிலை பற்றியும் சரியான பதிலைத் தரவில்லை.
மூன்றாம் திகதிக்குப் பின்னர் நாம் அவருடன் கதைக்கவில்லை. இந்நிலையில் திருகோணமலை அலுவலகத்திலுள்ள அக்ஷன்பாம் நிறுவனத்திலிருந்த கறுப்பின வெளிநாட்டவருக்கு மூதூரில் பிரச்சினை நடப்பதாக சொன்னபோதுதான் தாம் அவர்களை அழைத்து வருவதாகக் கூறினார்கள்.
இந்நிலையில் ஐந்தாம் திகதி அவர் உயிருடன் இருக்கவேண்டுமென வேண்டி ஆலயத்திற்குச் சென்று கற்பூரம் கொழுத்தி கும்பிட்ட பின் கோயிலால் வரும்போது திருகோணமலை அக்ஷன்பாம் நிறுவனத்துக்குச் சென்றோம்.
அப்போது அங்கிருந்தவர்கள் பதினேழு பேரும் மல்லிகைத்தீவில் இருப்பதாகக் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து ஆறாம் திகதியும் திருகோணமலை அலுவலகத்திற்குச் சென்றபோது அவர்கள் சரியான பதிலைத் தரவில்லை.
அன்றைய தினம் பல தடவைகள் சென்று இதுபற்றி விசாரித்தோம்.
இந்நிலையில் ஏழாம் திகதி காலை பத்திரிகை வாயிலாக அக்ஷன்பாம் ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டதை அறிந்தோம்.
ஆனால், அச்சமயம் 15 பேரே கொலை செய்யப்பட்டிருந்ததாகவும் இருவரைக் காணவில்லையென்றுமே செய்தி வெளியாகி இருந்தது.
ஆனால், படுகொலை செய்யப்பட்ட பதினைந்து பேரில் இவரின் பெயரும் இருந்தது.
அதுவரை திருகோணமலை அக்ஷன்பாம் நிறுவன அதிகாரிகள் எதுவும் கதைக்கவில்லை.
பின்னர் அவர்களின் உடலையாவது கொண்டுவந்து தாருங்கள் என்று கேட்டபோது கொண்டுவந்து தருவதாகக் கூறினார்கள்.
முதலாம் திகதி தான் மூதூரில் மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நான்காம் திகதி வரை அவர்களைக் காப்பாற்றுவதற்கு இடைவெளி இருந்தும் அக்ஷன்பாம் நிறுவனத்தினர் காப்பாற்றத் தவறிவிட்டனர்.
அரசுடனோ, இராணுவத்தினருடனோ கதைத்து இவர்களை மீட்க அவர்கள் முயற்சித்திருக்கலாம்.
இந்நிலையில் ஏழாம் திகதி இரவு 11.30 மணியளவில் சடலங்கள் திருகோணமலை மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டிருந்தது.
மறுநாள் எட்டாம் திகதி பிரேத பரிசோதனைகள் நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து மாலை 1.30 மணிக்கு உடல் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு அரை மணித்தியாலயத்தில் புதைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
நான் உடலைப் பார்க்கவில்லை. பெட்டியை திறக்கவும் இல்லை.
அனைத்தும் நிறைவடைந்த பின்னர் ஊழியர் சேமலாப நிதியும் ஊழியர் நம்பிக்கை நிதியும் தலா 58,000 ரூபா கிடைத்த அதேநேரம், அக்ஷன்பாம் நிறுவனத்தால் நான்கு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாவும் நஷ்டஈடாக கிடைத்தது.
அவருக்கு எந்தவிதமான எதிரிகளும் இருந்ததாக நான் அறியவில்லை. அத்துடன், விடுதலைப் புலிகளுடனோ அல்லது அரச முப்படைகளுடனோ எந்தவிதமான தொடர்பையும் கொண்டிருக்கவும் இல்லை.
இறுதியில் இச்சம்பவம் தொடர்பில் இப்பதினேழு பேரையும் அக்ஷன்பாம் நிறுவனத்தினர் காப்பாற்றத் தவறியது முதல் பிழை.
மூதூரில் மக்களும் அரச ஊழியர்களும் இடம்பெயர்ந்தபோது இவர்களை வெளியேற ஏன் அனுமதி வழங்கப்படவில்லை. அவ்வாறு அவர்கள் வெளியேறி இருந்தால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்காது எனத் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.