மீன்பிடிப் படகில் இலங்கைக்கு பொருட்களை கடத்திய இராமேஸ்வரம் மீனவர்கள் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்தனர்.
இராமேஸ்வரம் துறைமுக்த்திலிருந்து,மார்ச் 29 ஆம் திகதி தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இலங்கை கடல் பகுதிக்குள் சென்ற அவர்கள், மீனவர் கிறிஸ்துவை இரணை தீவில் இறக்கிவிட்டு மார்ச் 30 ஆம் திகதி காலை இராமேஸ்வரம் திரும்பினர். மீண்டும் திங்கட்கிழமை இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் இரணை தீவு சென்று மீனவர் கிறிஸ்துவை ஏற்றி கொண்டு இராமேஸ்வரம் திரும்பினர்.
இதனிடையே இலங்கையிலிருந்து மீன்பிடிப் படகில் பொருட்கள் கடத்தி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பொலிஸார் கடற்கரையில் படகை சோதனை செய்தனர். இலங்கையில் தயாரிக்கப்பட்ட ராணி, லக்ஸ் சோப்கள், பால் பவுடர் டின்களை கைப்பற்றினர். மீனவர்களை விசாரித்ததில்,மீனவர் கிறிஸ்து இரணை தீவில் இறங்கியது தெரியவந்தது. கிறிஸ்துவிடம் விசாரித்ததில், `இலங்கையில் புலிகள் முகவர்களை சந்தித்து திரும்பியதாகவும் இங்குள்ளவர்கள் கொடுக்கும் பொருட்களை இலங்கையில் புலிகளுக்கு கொண்டு சேர்த்ததாக' கூறினார். படகு உரிமையாளர் உட்பட ஐந்து பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.