அநுராதபுரம் ஹெப்பிட்டிக்கொலாவ பகுதியின் பாதுகாப்பு விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிழக்கின் பல பகுதிகளிலிருந்தும் வாபஸ் பெறப்பட்டு வடக்கே கொண்டுவரப்பட்ட அதிரடிப்படையினரே இந்தப்பகுதியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைய விசேட அதிரடிப் படையின் ஒன்பது முகாம்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியும் பிரதிப் பொலிஸ் அதிபருமான கே.எம்.எல். சந்திரசிறி சரச்சந்திர தெரிவித்தார்.
இந்தப் பிரதேசத்தின் பிரதான வீதிகள், முன்னரங்க காவல் நிலைகள் ஆகியவற்றின் பாதுகாப்பும் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன்படி மதவாச்சி முதல் ஹொறவபொத்தானை ஊடாக பதவியா வீதியில் அரசமரத்தடிச் சந்தி வரையான 52 கிலோ மீற்றர் தூரமும் விசேட அதிரடிப் படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், துட்டுவெவ பகுதியிலிருந்து மாணிக்கவெவ பகுதிவரையான முன்னரங்க காவல் நிலைக்குரிய 22 கிலோ மீற்றர் பகுதிக்கான பாதுகாப்பும் அதிரடிப் படையினரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஹெப்பிட்டிக்கொலாவ பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரச்சந்திர தெரிவித்தார்.