* புத்தளத்தில் நண்பர் வீட்டில் நின்றபோது சம்பவம்
மன்னார் தாழ்வுப்பாடு பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செபஸ்தியன் கூஞ்ஞா (36 வயது), கடந்த திங்கட்கிழமை புத்தளம் ரத்மல்யாய பகுதியில் தனது நண்பரொருவரின் வீட்டிலிருந்த போது, வெள்ளை நிற வாகனமொன்றில் வந்தவர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக மன்னார், புத்தளம் பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து புத்தளம் வந்த பிரஸ்தாபநபர், இரவு 10 மணியளவில் தில்லையடிப் பகுதியில் வைத்து அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள குடிவரவு- குடியகல்வு திணைக்களத்துக்கு செல்ல மன்னாரிலிருந்து புத்தளம் வந்து தங்கிச்செல்லும் நோக்கிலேயே தில்லையடியில் பிரஸ்தாபநபர் பஸ்ஸிலிருந்து இறங்கியுள்ளார்.
சற்று நேரத்தில் வந்த சிலர் வீட்டுக் கதவை தட்டியதுடன் சிங்கள மொழியில் விளக்குகளை அணைக்குமாறு கூறி செபஸ்தியன் கூஞ்ஞாவை விசாரித்ததுடன், அவரை மேலதிக விசாரணைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமெனக் கூறி அவர் கைவசம் இருந்த ஆவணங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற மறுதினம் செவ்வாய்க்கிழமை வீட்டு உரிமையாளர் புத்தளம் பொலிஸில் முறையிட சென்ற போதும் முறைப்பாட்டை பொலிஸார் பதிவு செய்ய மறுத்துள்ளனர்.
பின்னர் செபஸ்தியன் கூஞ்ஞாவின் உறவினர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து தில்லையடி பிரதேச வீட்டு உரிமையாளரிடத்தில் வாக்கு மூலத்தையும் பதிவு செய்துள்ளனர்.