* ஐ.தே.க. நடத்துகிறது
எம்.ஏ.எம். நிலாம்
வாழ்க்கைச் செலவு உயர்வால் கஷ்டப்படும் மக்களை ஒன்று திரட்டி இன்று நாடு பூராவும் 120 ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு ஒரே நேரத்தில் 120 தேர்தல் தொகுதிகளில் சட்டி, பானைகளை வீதியில் போட்டு உடைத்து அரசுக்கு எதிரான அதிருப்தியை மக்கள் காட்டவுள்ளனர்.
"சால்வையின் சாபத்து"க்கு எதிரான போராட்டம் என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைப்பாளர்களும் தத்தமது தொகுதிகளில் பிரதான நகரில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்த விருக்கின்றனர்.
இன்று ஆரம்பமாகும் இந்த மக்கள் போராட்டம் தொடர்ந்து ஒரு மாத காலத்துக்கு இடம்பெற்ற பின்னர் இம்மாத இறுதியில் இலட்சக்கணக்கான மக்களை கொழும்புக்கு அழைத்து வந்து பாரிய எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கின்றது. இப்போராட்டத்தை ஒழுங்கு செய்யும் பொறுப்பு நாடுதழுவிய மட்டத்தில் திரட்டப்பட்டுள்ள நான்கு இலட்சத்து 50 ஆயிரம் பேரைக் கொண்ட மக்கள் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டம் பற்றி கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க;
"நாட்டில் ஊழல், மோசடி, வீண்விரயம் என்பனவற்றை சமாளிப்பதற்கு அரசு நாணயத்தாள்களை அச்சிட்டு வருகின்றது. இதன் காரணமாக நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருகின்றது. நாணயத்தாள் அச்சிடுவதாலேயே நாட்டில் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூடத் தெரிவித்திருக்கின்றது" எனச் சுட்டிக் காட்டினார்.
மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.