*ஹெலஉறுமய கூறுகிறது
எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது அங்கு வாழும் தமிழ், சிங்கள மக்கள் அச்சுறுத்தப்படும் அபாயம் ஏற்படலாமென சுற்றாடல் அமைச்சரும், ஹெலஉறுமய பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க எச்சரித்திருக்கின்றார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், செயலாளர், தவிசாளர் ஆகியோர் போட்டியிட முன்வந்திருப்பதையடுத்து அங்கு தேர்தல் போட்டி உச்சகட்டத்தை அடைந்திருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இருந்தபோதிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்திருப்பதன் மூலம் கிழக்கில் வாழும் தமிழ், சிங்கள மக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகும் நிலை உருவாகும் சாத்தியம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை அமைப்பாளரான எச்.எம்.ஹரீஸை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பக்கம் எடுத்து அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடவைக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
தான் முஸ்லிம் காங்கிரஸை விட்டு வரத்தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ள ஹரீஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அழைப்பை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.