* நிலைமையை சமாளிக்க அதிகாரிகள் தயார்
வன்னிப் பிரதேசத்தில் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றுக்கு படைத்தரப்பினர் திட்டமிட்டு வருவதாக வெளியான தகவல்களையடுத்து அங்கிருந்து சுமார் ஒரு இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாகவும், அதனால் இடம் பெயர்ந்து வரும் மக்களை தற்காலிகமாக தங்கவைப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறு உயர் மட்டத்தில் இருந்து அதிகாரிகளுக்கு உத்தரவு கிடைத்துள்ளது. இதனால் நிலைமையைச் சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னைய காலங்களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளால் இடம் பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையம் இன்னமும் மூடப்படவில்லை.
இனிமேலும் வரும் மக்களை தங்கவைத்து பராமரிப்பதற்கு போதிய இட வசதிகள் உள்ளன எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்னும் உள்நாட்டுப் போர் முடிவடையவில்லை எனவும் அகதிகளின் விடயங்களை கவனிக்க வேண்டியவர்களாக செயற்படுகின்றோம் எனவும் அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஐ.நா.சாசனத்தின் படி உள்நாட்டுப் போர் தீவிரமடையுமானால் அகதிகளின் தொகையும் அதிகரிக்கும் என்றும் அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் வவுனியாவில் செயற்பட்டு வருவதுடன் நிலைமைகளை நன்கு ஆராய்ந்து வருவதாகவும் இந்த அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து நிலைமை சீரடைந்து சிவில் நிர்வாகமும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவும் இடம் பெற்று அமைதியும் சுமுக நிலைமையும் ஏற்பட்டாலே அகதிகளுக்கான ஐ.நா.நிறுவனத்தின் பணிகள் நிறுத்தப்படும்.
அது வரையும் அகதிகளுக்கான ஐ.நா.நிறுவனத்தின் பணிகள் தொடரும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.