இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான அன்ரூ லவ் ஸ்ரீவன் ஹமண்ட், டாக்டர் அசோக்குமார், அன்ரூ ஜோர்ஜ் ஆகியோர் அடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவினர் ஈ.பி.டி.பி. யின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
31 ஆம் திகதி மாலை அமைச்சரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது, இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுத்திட்டம் மற்றும் சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் அவை தொடர்பான பல விபரங்களையும் ஈ.பி.டி.பி.யின் நிலைப்பாட்டினையும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் விரிவாகக் கேட்டறிந்தனர்.
தமிழ் பேசும் மக்களின் சார்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஓர் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற வகையில் தற்போது மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான விவகாரங்கள் குறித்து எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முடிவற்று தொடரும் அழிவு யுத்தம் என்பது பல்வேறு மனித உரிமை மீறல்களுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கி வருவதாகவும், தமிழ் பேசும் மக்களின் பெயரால் தொடரப்படும் இந்த யுத்தத்தின் அவலங்களில் இருந்து எமது மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு முன்பதாக தமிழரசுக்கட்சி பாராளுமன்ற குழுத் தலைவரையும் சந்தித்துள்ள நிலையில், அது குறித்து பிரஸ்தாபித்தபோது பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
தமிழ்க் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாணத்தில் தற்போது நடைபெறும் மாகாண சபைத் தேர்தலை பகிஷ்கரிப்பதற்கு தாம் தோல்வியடைவோம் என்பதை நன்கு அறிந்துள்ளதே காரணம் என்பதையும் எடுத்துக் கூறினார். சந்திரிகா அரசானது இணைந்த வடகிழக்கினை உள்ளடக்கிய ஓர் தீர்வுத்திட்டத்தினை அன்று முன்வைத்தபோது இதே தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களே அன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரோடு இணைந்து அதனை தீயிட்டு கொளுத்தியதையும் நினைவுகூர்ந்தார்.
படுகொலைகளை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திய அவர் உயிரச்சுறுத்தல் காரணமாக அரசாங்கத்திடம் தஞ்சமடைந்தோருக்கு தமது அமைச்சு மூலமாக புனர்வாழ்வு நிலையங்களை அமைக்கும் திட்டத்தினையும் முன்வைத்தார்.
இலங்கை தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு குறித்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்தபோது எமது நட்பு நாடாகிய இந்தியாவின் அனுசரணை இன்றி எந்தவொரு நிரந்தர தீர்வினையும் எட்டிவிட முடியாது என வலியுறுத்திய டக்ளஸ் தேவானந்தா இலங்கையின் நட்பு நாடாக மட்டுமன்றி இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையினை நன்கு உணர்ந்துகொண்ட நாடாகவும் இந்தியா விளங்குவதையும் தெளிவுபடுத்தினார்.
இச்சந்திப்பின் போது ஈ.பி.டி.பி.யினால் முன்வைக்கப்பட்ட நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வுத்திட்டம் குறித்தும் டக்ளஸ் தேவானந்தா எடுத்து விளக்கினார். மேலும், அரசியல் தீர்வுத்திட்டத்தின் மூலமே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் உறுதியான நம்பிக்கையினை கட்டியெழுப்ப முடியும் எனவும், அவலங்களுக்குள் சிறைபட்டிருக்கும் எமது மக்களை அதிலிருந்து மீட்டெடுத்து நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச்செல்ல முடியும் எனவும் எடுத்து விளக்கினார்.
நகரமுடியாமல் சகதிக்குள் முடங்கிப் போயிருக்கும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமை சுதந்திரத்திற்கான தீர்வு முயற்சியினை உரிய திசை நோக்கி நகர்த்துவதற்கு இலங்கை அரசியல் அமைப்பின் கீழ் நடைமுறைச் சாத்தியமான முறையில் ஈ.பி.டி.பி.யினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுத்திட்டத்தினை கேட்டறிந்துகொண்ட இலங்கை வந்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அது குறித்த தமது அக்கறையினையும் இச்சந்திப்பின்போது வெளிப்படுத்தினர்.
இச்சந்திப்பின்போது அமைச்சரின் ஆலோசகரான சட்டத்தரணி செல்வி மகேஸ்வரி வேலாயுதம் மற்றும் கட்சியின் நிர்வாகச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய அ. இராசமாணிக்கம் ஆகியோரும் பங்குகொண்டனர்.