வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடத்தப்பட்ட ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட நீதிபதியின் கடும் அழுத்தத்தையடுத்தே இவர்கள் விடுதலையாகியுள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் செட்டிகுளம் பகுதியில் கடத்தப்பட்ட ஆறுபேர் இந்த வாரம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடத்தல்கள், கொள்ளைகளை நிறுத்துவது தொடர்பாக மாவட்ட நீதிமன்றில் நடைபெற்ற சந்திப்பையடுத்தே, ஓரிரு தினங்களில் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட ஆறு பேரும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை செட்டிகுளம் பொலிஸாரால் மாவட்ட நீதிமன்றிற்கு கூட்டி வரப்பட்டனர். எனினும், தாங்கள் கடத்தப்பட்டது தொடர்பாக மேலதிக தகவல்கள் எதனையும் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
இவ்வேளையில் அவர்களை நோக்கி, சுதந்திரமான வாக்கு மூலத்தை நீதிபதியிடம் வழங்க விரும்பினால் அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த நீதிபதி, வாக்குமூலம் வழங்க நீதிபதியால் கட்டாயப்படுத்த முடியாதெனவும் கூறினார்.
அச்சம் காரணமாக தாங்கள் கடத்தப்பட்டது சம்பந்தமான விபரங்களை தெரிவிக்க விரும்பவில்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாரிக்குட்டியூரில் இருவர் கடத்தப்பட்டனர். இதையடுத்து அப்பகுதி படைமுகாம் கட்டளை அதிகாரியை மன்றுக்கு அழைத்த நீதிபதி அது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.
இதையடுத்து கடத்தப்பட்டவர்களில் ஒருவர் விடுவிக்கப்பட்டார். மற்றையவர், இராணுவச் சீருடையில் பவள் கவச வாகனத்தில் வந்தோரால் பிற்பகல் ஒரு மணியளவில் கூட்டிச் செல்லப்பட்டதாக, இராணுவக் கட்டளை அதிகாரி முன்பாக மனைவி சாட்சியமளித்ததுடன், இராணுவ அதிகாரி முன்பாக சாட்சியமளித்ததால் உயிராபத்து ஏற்படலாமெனவும் தெரிவித்தார்.
வவுனியாவில் எந்தத் தமிழ் ஆயுதக் குழுவிடமும் பவள் கவச வாகனமில்லையென்பதால், இந்தக் குற்றச்சாட்டை கவனத்திலெடுத்து கடத்தப்பட்டவரை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் வாரிக்குட்டியூர் இராணுவமுகாம் கட்டளை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதேநேரம், வவுனியா நகர மையப் பகுதியில் கடத்தப்பட்டவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், அவரை நீதிமன்றிற்கு அழைத்து வந்ததுடன், நீதிபதியின் உத்தரவின் பேரில் அனைவரும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நீதிமன்றின் கடும் அழுத்தத்தால் இத்தகைய கடத்தல் சம்பவங்கள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் வந்தபோதும், கடத்தப்படும்போது அழுது குழறும் உறவினர்கள், விடுவிக்கப்படும் போது பொலிஸாருக்கோ நீதிமன்றுக்கோ தெரியப்படுத்தாதது கவலை தரும் செயலென நீதிபதி கவலை தெரிவித்தார்.