வடக்கே விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வரும் இலங்கைப் படையினர், பாகிஸ்தானிடமிருந்து அவசர இராணுவ உதவியை கோரியுள்ளனர்.
60 மில்லிமீற்றர் மோட்டாருக்குரிய ஒன்றரை இலட்சம் குண்டுகளையும் பெருந்தொகை கைக்குண்டுகளையும் உடனடியாக வழங்குமாறு பாகிஸ்தானிடம் இலங்கை இராணுவம் அவசர கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.ஏ.என்.எஸ். செய்திச்சேவை தெரிவித்தது.
அத்துடன், 25 மில்லியன் டொலர் பெறுமதியான 81 மி.மீ, 120 மி.மீ, 130 மி.மீ மோட்டார் குண்டுகளையும் அடுத்த ஒரு மாதத்திற்குள் வழங்குமாறும் இலங்கை இராணுவம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்ரப் பர்வேஷ் கயானியிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதையடுத்து, தனது பல்வேறு ஆயுதக் களஞ்சியங்களிலிருந்தும் இந்த ஆயுத உதவியை இலங்கைப் படையினருக்கு உடனடியாக வழங்க பாகிஸ்தான் இராணுவம் சம்மதித்துள்ளது.
இலங்கையின் வடக்கே பலமுனைகளிலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக பாரிய தாக்குதல்களை தொடுத்து வரும் இராணுவத்தினர், அண்மைக் காலமாக விடுதலைப்புலிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றனர்.
வவுனியா, மன்னார், மணலாறு மற்றும் யாழ்.குடாவில் கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. எனினும், அனைத்து முனைகளிலும் படையினர் மாதக் கணக்கில் இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் சிறிதளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.
இதனால், களமுனையில் இலங்கைப் படையினர் வெடிபொருட்களை பெருமளவில் செலவிட்ட நிலையில், தற்போது அதனை ஈடுசெய்வதற்காக பாகிஸ்தான் இராணுவத்தின் உதவியை நாடியுள்ளது.
இலங்கை அரசு பாகிஸ்தானிடமிருந்து 1999 முதல் மிகப் பெருமளவில் ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் கொள்வனவு செய்து வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் வரை இலங்கைப் படையினர் 500 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கொள்வனவு செய்துள்ளனர்.
இதேநேரம், கவசப்படையணிகளுக்காக இந்த ஆயுதக் கொள்வனவு சடுதியாக மிகப் பெருமளவில் அதிகரித்துள்ளது.
இலங்கைப் படையினருக்கு மோட்டார் குண்டுகள், வானொலிக் கருவிகள், கைக்குண்டுகள், கடற்படைக்கான வெடிபொருட்கள் மற்றும் டாங்கிகள் உட்பட பிரதான ஆயுத விநியோகஸ்தராக பாகிஸ்தானே உள்ளது.