* திஸ்ஸ அத்தநாயக்க நம்பிக்கை
எம்.ஏ.எம்.நிலாம்
கிழக்கு மாகாணசபையை ஐக்கிய தேசியக் கட்சி ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒத்துழைப்புடன் கூடிய பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றும் எனத் தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, முடிந்தால் கிழக்கு மாகாண சபைத்தேர்தலை வென்று காட்டுமாறு அரசுக்கு சவால் விடுத்தார்.
கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் பேராதரவோடு எமது பலத்தைக் காட்டுவதற்காகவே முஸ்லிம் காங்கிரஸின் ஒத்துழைப்போடு களமிறங்கியிருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து முடித்த பின்னர் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகமான கேம்பிரிட்ஜ் ரெறஸில் வைத்து ஊடகவியலாளர்களுடன் உரையாடுகையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
கிழக்கு மாகாண மக்கள் அரசுக்கு எதிரான தீர்ப்பை மே மாதம் 10 ஆம் திகதி உரிய முறையில் வழங்குவார்கள். தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் வீணாக்கப்பட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காவே ஐக்கிய தேசியக்கட்சியும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து இத்தேர்தலில் போட்டியிடத்தீர்மானித்தது.
கிழக்கு மக்களின் பலம் எத்தகையது என்பது நாம் அடுத்த மாதம் அரசுக்கு நிரூபித்துக்காட்டுவோம். அரசாங்கம் எமக்கு விடுத்த சவாலை தைரியமாக எதிர்கொள்வதற்கு நாம் தயாராகி விட்டோம். இப்போது நாம் அரசுக்கு விடுக்கும் சவால், முடிந்தால் கிழக்கு மாகாண சபையை வென்று காட்டட்டும் என்பதே ஆகும்.
ஐக்கிய தேசியக் கட்சி சவால்களைக்கண்டு பயந்து ஓடியொழியும் கட்சியல்ல. அடுத்துவரும் நாட்களில் மேலும் பல சவால்களை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். அவற்றை முறியடிக்கும் சக்தி எம்மிடமிருக்கின்றது. கிழக்கில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் போராட்டக்களமாகவே இத் தேர்தலை நாம் காண்கின்றோம்.
முஸ்லிம் காங்கிரஸ் உரிய நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளது. கிழக்கு முஸ்லிம்களின் பலத்தில் நம்பிக்கை வைத்தே அக்கட்சி எம்மோடு இணைந்து போட்டியிட முன் வந்துள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மகத்தான வெற்றியை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.
இன்று நாடு பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கிழக்கில் ஜனநாயகத்தைப் பாதுகாத்து அடுத்த கட்டமாக முழு நாட்டினதும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை ஆரம்பிப்போம். இந்தப் போராட்டத்தில் ஜனநாயகத்தை நேசிக்கும் அனைத்துச் சக்திகளும் எம்மோடு ஒன்றிணைய வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.